சர்வதேச நாணய நிதியம் இன்றி மாற்று வேலைத்திட்டத்தை முன்வையுங்கள் - ஐ.தே.க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் கையளிக்கும் போது 0.5 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் தற்போது 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல், தமக்கென சுயாதீனமான மாற்றுப் பொருளாதார வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரண தெரிவித்தார்.
கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள அலுவலகத்தில் 19-11-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 2027 ஆம் ஆண்டிற்காக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்ட யோசனைகள், மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துக்கு செல்ல மாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டு முன்வைத்த வரவு - செலவுத் திட்டத்தின் பிரதியொன்றையே சபையில் சமர்ப்பித்துள்ளனர்.
அஸ்வெசும, ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் சுகாதாரத் துறை ஒதுக்கீடுகள் எனப் பல விடயங்கள் 2024 வரவு - செலவுத் திட்டத்துடன் ஒத்துப்போகின்றன. உண்மையில் இந்த வரவு - செலவுத் திட்டத்தைத் தயாரித்தது பெலவத்தையா அல்லது நாட்டின் முன்னணி வர்த்தக சமூகமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் கையளிக்கும் போது 0.5 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் தற்போது 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. சாதாரண குடும்பத்துப் பிள்ளைகள் தமது அன்றாடக் கல்விச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் போது, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மாணவர்களுக்கு 10,000 ரூபா வழங்குவதாகக் கூறுவது, வீழ்ச்சியடைந்து வரும் பங்கு சந்தைக்குள் மக்கள் வரிப்பணத்தைச் செலுத்தி வர்த்தக நண்பர்களைக் காப்பாற்றும் முயற்சியாகும்.
எனவே, நடுத்தர வர்க்க மக்களுக்குத் தாங்க முடியாத அழுத்தங்களைக் கொடுத்து, வர்த்தக நண்பர்களின் தேவைக்கேற்ப பொருளாதாரத்தைக் கையாள்வதை விடுத்து, நாணய நிதியம் அற்ற மாற்றுத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.





