தமிழரசுக்கட்சியின் எம்.பிக்கள் பிரதமருடன் சந்திப்பு
இச்சந்திப்பில் தொல்லியல் பட்டதாரிகளையும் வரலாறுபாட ஆசிரியர்களாக உள்ளீர்ப்புச் செய்வது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தொல்லியல் பட்டதாரிகளையும் வரலாறுபாட ஆசிரியர்களாக உள்ளீர்ப்புச் செய்வது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் வலியுறுத்தினார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளில் காணப்படும் பௌதீக வள பற்றாக்குறை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எடுத்துரைத்தார்கள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், ஆகியோர் 18-11-2026 அன்று பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் தொல்லியல் பட்டதாரிகளையும் வரலாறுபாட ஆசிரியர்களாக உள்ளீர்ப்புச் செய்வது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொல்லியல் துறையில் பாரிய ஆளணித் தட்டுப்பாடு இருப்பதாகவும் எதிர்காலத்தில் தொல்லியல் பட்டதாரிகளை துறைசார்ந்த திணைக்களங்களில் உள்ளீர்ப்பு செய்ய ஆலோசிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஆகையால் எதிர்காலத்தில் தொல்லியல் பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்புச் செய்யவதில்லை என தீர்மானிக்கப்பட்டதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றிக்கொண்டு வரலாற்றுப் பாடத்தை கற்பிக்கும் தொல்லியல் பட்டதாரிகள், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் ஊடாகத் தோற்றி சித்தியடைந்தால், அவர்களை வரலாறுப் பாட ஆசிரியர்களாக உள்ளீர்ப்புச் செய்வது தொடர்பாக எதிர்காலத்தில் சாதகமாகப் பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசியப்பாடசாலைகளில் உள்ள வளப்பற்றாக்குறைகள் தொடர்பாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் அவ்வாறு வளப்பற்றாக்குறைகளுடன் காணப்படும் பாடசாலைகள் தொடர்பான விபரங்களையும், அங்கு காணப்படும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பான விபரங்களையும் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்ட பிரதமர்,அவற்றிற்குரிய தீர்வைப் பெற்று தருவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.





