சுகீஸ்வர பண்டாரவுக்கு ஒக்டோபர் 7 வரை விளக்கமறியல்
கோட்டை நீதிவான் பசன அமரசேன முன்னிலையில் 23-09-2026 அன்று சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விசேட கருத்திட்டப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளருமான சுகீஸ்வர பண்டார சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிவான் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கோட்டை நீதிவான் பசன அமரசேன முன்னிலையில் 23-09-2026 அன்று சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் பணியாற்றியதுடன், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த அதே காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தின் கருத்திட்டப் திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றி, ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தில் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றுக் கொண்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுகீஸ்வர பண்டார குறித்த பதவிகளை வகித்த காலத்தில், அரசாங்க வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் அங்குள்ள ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பிலும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, அவர் ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் 19 இலட்சத்து 33 ஆயிரத்து 65 ரூபாவையும் ( 1,933,065), திட்டப் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய காலத்தில் 42 இலட்சத்து 26 ஆயிரத்து 884 ரூபா 59 சதத்தையும் (4,226,884.59) முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இதற்கு முன்னரான வழக்கு விசாரணையின் போது சுகீஸ்வர பண்டார சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிவான், எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.





