தென்கிழக்கு பல்கலை தொடர்பில் முறையாக ஆராய்ந்து நடவடிக்கை - பிரதி அமைச்சர் மதுர
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமொன்று இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை அமைப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் முறையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-09-2026 அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவினால் முன்வைக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடத்தை அமைப்பது தொடர்பிலான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நாங்கள் தேசிய முக்கியத்துவம் மற்றும் சுகாதார முக்கியத்துவம் தொடர்பில் சிந்திக்கின்றோம். சுகாதார பொருளாதாரம் தொடர்பிலும் சிந்திக்கின்றோம். 2035ஆம் ஆண்டு வரையிலான சுகாதார அமைச்சின் வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. மருத்துவப் பீடம் பிரதேச அடிப்படையில் அல்லாமல் தேசிய முக்கியத்துவம் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படும். அத்துடன் சனத்தொகை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். சனத்தொகையில் வைத்தியர் ஒருவருக்கு எத்தனை நோயாளர் என்ற விடயங்களும் கவனம் செலுத்தப்படும்.இதன்படி இப்போது மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுகின்றது. பயிற்சி அளவு அதிகரிக்கின்றது.
இதேவேளை பிரதேச புள்ளி விபரங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. வைத்தியசாலைகளில் கட்டில்களின் எண்ணிக்கை நிரம்பும் அளவும் அவதானிக்கப்படும். வைத்தியசாலைகளுக்கு மருத்துவ கற்கை மாணவர்களை அனுப்பும் போது சிகிச்சைப் பிரிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இப்போது நான்கு மருத்துவ பீடங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. பணியாளர் தொகுதி, அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும். அந்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமொன்று இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். செலவுகள், வளங்களை செயற்பாட்டு ரீதியில் பயன்படுத்துதல், சுகாதார துறையில் உள்ள முன்னுரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். இதனால் உயர் கல்வி அமைச்சினால் குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து அறிக்கையை பெற்று ஆராய்ந்தே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விடயங்கள் அனைத்தும் பொது திட்டமிடலுடனேயே அமைக்க வேண்டும். இந்த கட்டமைப்பு சுகாதார துறையுடன் தொடர்புடையது. இதனால் முறைமையான திட்டங்களுடன் ஆராய்ந்து சாதாக தன்மை தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.





