சுயாதீன நீதித்துறை அதிகாரம் கொண்டவர்களை திருப்திப்படுத்துவதாக இருக்கக்கூடாது: அலி சப்ரி
இலங்கையில் நிறைவேற்றதிகாரம் மற்றும் சட்டவாக்க அதிகாரங்கள் பெருமளவுக்கு தனியொரு நபரான ஜனாதிபதியிடத்திலேயே குவிந்திருக்கின்றன.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி, தற்போதைய நீதித்துறைக் கட்டமைப்பை சாதகமாக உணர்ந்து, அதனை அவ்வாறே தக்கவைத்துக்கொள்ள விரும்பினால், அதனை ஆறுதலளிக்கும் விடயமாகக் கருதிவிடமுடியாது. உண்மையிலேயே சுயாதீனமான நீதித்துறை என்பது அரசியல் அதிகாரம் கொண்டவர்களைத் திருப்திப்படுத்துவதாக மாத்திரமன்றி, மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், இதுகுறித்து அலி சப்ரி அவரது பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
ஒரு குடியரசில் இறையாண்மை என்பது மக்களுக்கு உரியதாகும். சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும் அந்த இறையாண்மையானது நீதித்துறை, சட்டவாக்கம் மற்றும் நிறைவேற்றதிகாரம் ஆகிய மூன்று தனித்துவமான அங்கங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இருப்பினும் இலங்கையில் நிறைவேற்றதிகாரம் மற்றும் சட்டவாக்க அதிகாரங்கள் பெருமளவுக்கு தனியொரு நபரான ஜனாதிபதியிடத்திலேயே குவிந்திருக்கின்றன. எனவே அரசியலமைப்பு அடிப்படையில் அவ்விரு துறைகளுக்கும் இடையிலான அதிகாரப்பகிர்வு என்பது யதார்த்தத்துக்கு அப்பால், பெரும்பாலும் தத்துவார்த்த ரீதியானதாகவே காணப்படுகின்றது. அதன் காரணமாக சுயாதீன நீதித்துறை இன்றியமையாததாகின்றது.
நீதித்துறை என்பது அரசாங்கத்தின் ஓர் அங்கமோ அல்லது நீட்சியோ அல்ல. அதேபோன்று அது அரசாங்கத்தின் திட்ட அமலாக்கத்தில் ஒரு பங்காளியோ அல்லது அவற்றை எளிதாக்க வேண்டிய ஒரு கட்டமைப்போ அல்ல. மாறாகவே சுயாதீனமாகவும் நடுநிலையாகவும் தீர்ப்பளித்தல், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தல், மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நிறைவேற்றதிகாரம் அதன் சட்டபூர்வ அதிகார வரம்புக்குள் செயற்படுவதை உறுதிசெய்தல் என்பனவே அதன் அரசியலமைப்பு ரீதியான கடமைகளாகும்.
அரசாங்கம் சட்டத்தை மீறும் போதோ, அதன் அதிகாரங்களை மீறி அல்லது அரசியலமைப்புக்கு முரணாக செயற்படும் போதோ அதனைத் தடுப்பதற்கு நீதித்துறை தயாராக இருக்கவேண்டும். அரசியலமைப்பு ஜனநாயகத்தில் நீதித்துறை சுயாதீனத்துவத்தின் உண்மையான நோக்கம் அதுவேயாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய நிறைவேற்றதிகார ஜனாதிபதி, தற்போதைய நீதித்துறைக் கட்டமைப்பை சாதகமாக உணர்ந்து, அதனை அவ்வாறே தக்கவைத்துக்கொள்ள விரும்பினால், அதனை ஆறுதலளிக்கும் விடயமாக கருதிவிடமுடியாது. மாறாக அதுகுறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.
உண்மையிலேயே சுயாதீனமான நீதித்துறை என்பது அரசியல் அதிகாரம் கொண்டவர்களைத் திருப்திப்படுத்துவதாக மாத்திரமன்றி, மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.





