சீரற்ற காலநிலையினால் 747 பேர் பாதிப்பு
குருணாகல் மாவட்டத்தில் 111 வீடுகளும், அநுராதபுரம் மாவட்டத்தில் 31 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 10 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரையில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 747 பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் உள்ளடங்கலாக சொத்துக்களும் சேதமடைந்துள்ளன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்வதற்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் நிலவும் மழை, பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் 21-10-2025 அன்று வரையான காலப்பகுதியில் மொத்தமாக 187 குடும்பங்களைச் சேர்ந்த 747 பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். அதுமாத்திரமன்றி 152 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக குருணாகல் மாவட்டத்தில் 111 குடும்பங்களைச் சேர்ந்த 473 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேரும், காலி மாவட்டத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேரும், கேகாலை மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், பதுளை மாவட்டத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று குருணாகல் மாவட்டத்தில் 111 வீடுகளும், அநுராதபுரம் மாவட்டத்தில் 31 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 10 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அதேவேளை அநுராதபுரம் மற்றும் கேகாலை மாவட்டங்களில் இரு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
மேலும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேல்மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், தென்மாகாணம், வடமாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டம் என்பன உள்ளடங்குகின்றன.
இது இவ்வாறிருக்க வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பொதுவான வானிலை முன்னறிவிப்பின் பிரகாரம், நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்தோடு மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடியுடன்கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்வதற்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





