பல்கலை மாணவர் மத்தியில் மீண்டும் அச்சமான சூழல் - ஸ்ரீநேசன் எம்.பி.
மாணவர்களின் செயற்பாடுகளில் குறைபாடுகள் இருப்பின் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் மீண்டும் அச்சமான சூழ்நிலையை உருவாகியுள்ளததென இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஜீ.சிறிநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 19-03-2026 அன்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் ஒழுங்குவிதிகள் திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனால் மீண்டும் மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் செயற்பாடுகளில் குறைபாடுகள் இருப்பின் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அச்சுறுத்தலான சூழ்நிலை உருவாகியுள்ளதாக இப்போது அந்த மாணவர்கள் கூறியுள்ளனர். இந்த விடயத்தில் கவனம் செலுத்தி முற்போக்கான சிந்தனையில் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.





