வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீகநிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு: வைத்தியர் சத்தியலிங்கம்
புதிய பெயரில் கமக்கார் அமைப்பாக பதிவு செய்ய முடியும் என்றால் இதற்கு அரசாங்க அதிகாரிகளும் பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.

வவுனியா வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் நிலைமைகள் தொடர்ந்துகொண்டு இருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 23-07-2025 அன்று இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர்அங்கு மேலும் உரையாற்றுகையில்,
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள வெடிவைத்தகல்லு கிராம அலுவலர்பிரிவு தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பாரம்பரிய பிரதேசம். இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம்.
1983 காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் அதனை தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தனர்.
இதனால் நீண்காலமாக அங்கிருந்த தமிழ்மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் பயிர்ச்செய்கை செய்யப்படாது பராமரிப்பின்றி இருந்தது.
“திரிவச்சகுளம்”; வெடிவைத்தகல்லு கிராமத்திலுள்ள தமிழ் மக்களால் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த மூன்று சந்ததிக்கு முற்பட்ட வரலாற்றை கொண்ட கைவிடப்பட்ட குளமும் ஏறத்தாள 150 ஏக்கரிற்கு மேற்பட்ட வயற்காணிகளையும் கொண்டது.
இறுதி யுத்தத்திற்கு பின்னராக மக்கள் மீள்குடியேறிய நிலையில் காணி சொந்தக்காரர்கள் சிலர் 2019 காலப்பகுதியில் தமது மூதாதையரின் காணிகளை பயிச்செய்கைக்காக துப்பரவு செய்தபோது வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கலும் செய்யப்பட்டது.
வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. 5 வருடங்கள் நீடித்த வழக்கு 2024ல் போதுமான ஆதாரங்களை வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் சமர்ப்பிக்க முடியாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனாலும் இந்த காலப்பகுதியை தமக்கு சாதகமாக்கி கொண்ட அயற்கிராமத்தில் குடியேற்றப்பட்ட பெரும்பான்மையின விவசாயிகள் மகாவலி அதிகாரசபையின் துணையுடன் குத்தகை அடிப்படையில் தமிழ் மக்களால் துப்பரவு செய்யப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் 10 விவசாயக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் தற்போது 25 குடும்பங்களாக அதிகரித்துள்ளதுடன், நெடுங்கேணி கமநலசேவைகள் நிலையத்தில் “அந்தரவெவ கமக்காரர்அமைப்பு” என்று பதிவு செய்துள்ளனர்.
வனப்பாதுகாப்பு திணைக்களத்தால் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் காணி உரிமையாளர்களுக்கு காணிக்குள் செல்வதற்கு தடைவிதித்துள்ள காலப்பகுதியில் எவ்வாறு மகாவலி அதிகாரசபை அந்தக் காணிகளை குத்தகைக்கு வழங்கமுடியும்?
புதிய பெயரில் கமக்கார் அமைப்பாக பதிவு செய்ய முடியும் என்றால் இதற்கு அரசாங்க அதிகாரிகளும் பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.
ஓரிரு மாதங்களிற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் 200 ஏக்கரிற்கு அதிகமான பிரதேசம் திட்டமிட்டவகையில் காடழிப்பு செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்களின் தகவலின்படி சுமார் ஒன்றரை மாதங்களிற்கு மேலாக 5 டோசர்களும் 2 ஜே.சீ.பி இயந்திரங்களும் காடழிப்பில் ஈடுபட்டதாக கூறுகின்றனர்.
தமிழ் மக்கள் தமது விவசாயத் தேவைக்காக வேலி அடைப்பதற்காக தடிகளை வெட்டினால் சிறையில் அடைக்கும் வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலி ஸாருக்கு ஒன்றரை மாதங்கள் அதுவும் பாரிய இயந்திரங்களைக் கொண்டு காடழிப்பு செய்யப்பட்டமை தெரியாது போனமை ஆச்சரியமாக இருக்கின்றது.
அத்துடன் தற்போதைய விலைவாசியில் ஒரு ஏக்கர் காணி துப்பரவாக்குவதற்கே குறைந்தது ரூபா ஒரு இலட்சம் தேவைப்படுமென்றால் 200 ஏக்கரிற்கு மேற்பட்ட காடுகள் துப்பரவு செய்வதற்கு எத்தனை மில்லியன் தேவைப்பட்டிருக்கும்?
அப்படியென்றால் இதனை சாதாரணமாக பொதுமக்களால் செய்யமுடியுமா? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த பிரதேசத்திற்கு சென்று விசாரித்ததில் இந்தக் காடழிப்பு பற்றி பொலி ஸாரோ வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரோ அறிந்திருக்கவில்லை என்றுகூறப்பட்டது. இதனை நம்பக்கூடியதாக உள்ளதா? ஆக தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு கொள்கைளில் உங்கள் ஆட்சியிலும் எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை என்றார்.