தனிப்பட்ட விருப்புவெறுப்பில் சட்டங்கள் இயறப்படவில்லை: ஜனாதிபதி அநுர அறிவிப்பு
இலங்கையின் கலை கலாசாரம், இயற்கை அம்சங்கள் மற்றும் பௌத்த மத கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு அமைவாகவே சுற்றுலா கைத்தொழில்துறையை அபிவிருத்தி செய்ய முடியும்.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தண்டனை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்துக்கு தேவையாயின் மேலதிகமாகவும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயார். தனிப்பட்ட விருப்பு,வெறுப்பு மற்றும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எந்த சட்டங்களையும் நாங்கள் இயற்றவில்லையென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளியை வளாகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகுல் மடுவ சபா மண்டபத்தில் 3-10-2025 அன்று நடைபெற்ற சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சியாம் மகா நிகாயத்தின் அஸ்கிரி பீடத்தின் புதிய அனுநாயக்கராக நியமிக்கப்பட்டுள்ள, வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரருக்கு ஜனாதிபதி, சன்னஸ் பத்திரத்தை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் கலாசாரம்,பௌத்த கோட்பாடுகள் மற்றும் இயற்கை அம்சங்கள் ஆகியவற்றின் ஊடாகவே சுற்றுலாத்துறை கைத்தொழிலை மேம்படுத்த முடியும்.மாறுப்பட்ட வழிமுறையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது எனவும் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அதிகாரசபை வெளியிட்ட அறிக்கை பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. அதிகார சபை குறிப்பிட்ட விடயத்தை ஒருதரப்பினர் திரிபுப்படுத்தி அவற்றை சமூகமயப்படுத்தினார்கள்.
இலங்கையின் கலை கலாசாரம், இயற்கை அம்சங்கள் மற்றும் பௌத்த மத கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு அமைவாகவே சுற்றுலா கைத்தொழில்துறையை அபிவிருத்தி செய்ய முடியும்.
அதனை தவிர்த்து மாறுப்பட்ட வழியில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. அவ்வாறான நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. தண்டனை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் பற்றி பேசப்படுகிறது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதே தவிர சட்டமாக்கப்படவில்லை.
தேவையாயின் மேலதிகமாகவும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயார். தனிப்பட்ட விருப்பு,வெறுப்பு மற்றும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எந்த சட்டங்களையும் நாங்கள் இயற்றவில்லை.இந்த விடயங்களை மகாநாயக்க தேரர்களுக்கு எடுத்துரைத்துள்ளேன் என்றார்.