மீறல்களின் வடுக்கள் இன்னமும் ஆறவில்லை: பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள்
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அவற்றின் வடுக்கள் இன்னமும் தொடர்வதாகவும், அவர்கள் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அவற்றின் வடுக்கள் இன்னமும் தொடர்வதாகவும், அவர்கள் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்துவருவதாகவும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் 08-09-2025 அன்று ஜெனீவாவில் ஆரம்பமானது. கூட்டத்தொடரின் தொடக்கநாள் அமர்வில் ஜெனீவா நேரப்படி நண்பகல் 12.15 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 3.45) உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது எழுத்துமூல அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து உரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான விவாதத்தின்போது இலங்கையின் இணையனுசரணை நாடுகளான பிரிட்டன், கனடா, வட மெசிடோனியா, மொன்ரெனேக்ரோ மற்றும் மாலாவி ஆகிய நாடுகளின் சார்பில் கருத்துரைத்த பிரிட்டன் பிரதிநிதி, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையைப் பெரிதும் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
அதேபோன்று இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அவற்றின் வடுக்கள் இன்னமும் தொடர்வதாகவும், அவர்கள் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என வலியுறுத்திய அவர், நீண்டகாலமாகத் தொடரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படவேண்டும் என்றும், சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படவேண்டும் என்றும் பிரிட்டன் பிரதிநிதி வலியுறுத்தினார்.





