இலத்திரனியல் விசா முறைமை: உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் குடும்பத்தார் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டமை பற்றி தற்போது பேசப்படுகிறது.
இலத்திரனியல் விசா முறைமை தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களை கட்டித்தழுவவும் செல்லவில்லை யென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08-11-2025 அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். நாட்டு மக்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதி ஏதும் குறிப்பிடவில்லை என்று சொல்கிறார்கள். இவர்களின் குற்றச்சாட்டுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்.
போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முழு நாடும் ஒன்றாக திட்டத்துக்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் அரசியல் பேதமின்றி முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் குடும்பத்தார் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டமை பற்றி தற்போது பேசப்படுகிறது. குற்றவாளிகளை நாங்கள் பாதுகாக்கவில்லை.இதனால் தான் அந்த உறுப்பினர் பதவி விலகியுள்ளார். போதைப்பொருள் குற்றத்துக்காக கைது செய்யப்படும் போது நாங்கள் எவரையும் கட்டித்தழுவவில்லை.
இலத்திரனியல் விசா முறைமை மோசடி பற்றி எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரம் உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள ஒரு விடயம் தொடர்பில் எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இலத்திரனியல் விசா முறைமை விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஊழல் மோசடியாளர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.





