மோடியின் விசேட செய்தியுடன் கொழும்பை வந்தடைந்தார் ஜெய்சங்கர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த மீட்புப் பணிகளின் அடுத்தகட்டமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக அவரது விசேட செய்தியுடன் 22-12-2025 அன்று கொழும்பை வந்தடைந்தார். ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வந்துள்ள அவர் , 23-12-2025 அன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயமானது இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கையை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவுகளைச் முகாமைத்துவம் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட சாகர் பந்து திட்டத்தின் பின்னணியில் மேற்கொள்ளப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தித்வா சூறாவளி தாக்கிய 24 மணி நேரத்திற்குள் இந்தியா தனது மீட்புக் குழுக்களை அனுப்பி, இலங்கைக்கு உதவிய முதல் நாடாக திகழ்ந்தது. சுமார் 1,134 தொன்களுக்கும் அதிகமான மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உலர் உணவுகள், கூடாரங்கள், போர்வைகள், சுகாதாரக் கருவிகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் அடங்கும்.
இந்திய இராணுவத்தின் 60 தற்காலிக மருத்துவமனைகள் மஹியங்கனை பகுதியில் அமைக்கப்பட்டு, சுமார் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், எனப்படும் நடமாடும் அதிநவீன மருத்துவக் கியூப்களும் வழங்கப்பட்டன. மண்சரிவு நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்துப் பாதைகளைச் சீரமைக்க, இந்திய இராணுவப் பொறியாளர்களின் ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த மீட்புப் பணிகளின் அடுத்தகட்டமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மீட்புப் பணிகளுக்காக இந்தியா சார்பில் ஒரு சிறப்பு நிதியுதவித் தொகுப்பை அவர் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த குறுகிய விஜயத்தில் அவர் வடக்கு, கிழக்கு மற்றும் மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோரையும் சந்திப்பார் என எதிபார்க்கப்படுகின்றது.





