சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரி ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு கடந்த 7ஆம் திகதி திடீர் விஜயம் மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க ஆணைக்குழு சட்டத்தை மீறும் செயலாகும். இது குறித்து விசாரிப்பதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரி ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இவ்விடயத்தை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் மரணங்கள், மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன், கடந்த 7ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆணைக்குழு தனது கடுமையான கரிசனையை வெளியிட்டுள்ளது.





