எல் நினோ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு, அதிகாரிகள் குழு நியமனம்
இந்த உபகுழுவின் தலைவராக சுற்றாடல் அமைச்சர் மருத்துவர் தம்மிக்க பட்டபந்தி செயற்படவுள்ளார்.
உலகளாவிய ரீதியில் ஏற்படும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் பாரதூரமான தாக்கங்களுக்கு முகங்கொடுப்பதற்காக, விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காலநிலை மாற்றங்களுக்கு இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நாடாக இலங்கை காணப்படுவதால், எல் நினோ நிலைமை காரணமாக நாட்டில் மழைவீழ்ச்சியில் மாற்றங்கள், அதிக வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த இடர்கள் அதிகரித்துள்ளன. விஞ்ஞானபூர்வமான எதிர்வுகூறல்களின்படி, இவ்வருட இறுதி தொடக்கம் தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படக்கூடிய இந்த எல் நினோ தாக்கத்தினால் நாட்டின் சமூக, பொருளாதாரத் துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.
இதனைத் தடுப்பதற்காக அரச நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சமுதாயமட்ட அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை பலப்படுத்தி, தேசிய மட்ட செயற்பாட்டுத் திட்டமொன்றை அமல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, எல் நினோ நிலைமையால் ஏற்படக்கூடிய நீர், மின்சாரம் மற்றும் உணவு நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்காக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்களைத் தயாரிப்பதற்கும், பொதுமக்களை விழிப்புணர்வூட்டி ஆபத்துகளைத் தணிப்பதற்கும் விசேட அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த உபகுழுவின் தலைவராக சுற்றாடல் அமைச்சர் மருத்துவர் தம்மிக்க பட்டபந்தி செயற்படவுள்ளார். குழுவின் ஏனைய உறுப்பினர்களாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த, பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் மருத்துவர் சுசந்த ரணசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த அமைச்சரவை உபகுழுவுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஒத்துழைப்புகளை வழங்குவதற்காக ஜனாதிபதி பணிக்குழாம் தலைவரின் தலைமையில் உயர் அதிகாரிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சுற்றாடல் அமைச்சு, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, வலுசக்தி அமைச்சு, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம், வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம், வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம், அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் நாயகம், இலங்கை மகாவலி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொது முகாமையாளர் மற்றும் இலக்ரிசிற்றி ஜெனரேஷன் லங்கா (பிறைவெட்) லிமிட்டட் பொது முகாமையாளர் அல்லது பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரும் இந்த அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.





