கணக்காய்வாளர் நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறியான நிலை
தேசிய பெறுகை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிப்பதற்கான விடயம் முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கணக்காய்வாளர் நாயகத்தினை நியமிப்பதற்காக அரசியலமைப்பு பேரவையின் அனுமதியை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறியான நிலைமை காணப்படுகின்றது.
அரசியலமைப்பு பேரவை 30-01-2026 அன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ன தலைமையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நிகழ்நிலையில் பங்கேற்றிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவ பங்கேற்றிருக்கவில்லை.
இந்நிலையில், தேசிய பெறுகை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிப்பதற்கான விடயம் முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்காக விண்ணப்மொன்றைக் கோரி நியமனத்தை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
அதனையடுத்து, கணக்காய்வாளர் நாயகத்தினை நியமிப்பதற்கான விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்ட தற்போது சிரேஷ்ட கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றும் எல்.எஸ்.ஐ.ஜனரத்னவை நியமிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
அச்சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா அவர் தொடர்பில் ஏற்கனவே தன்னால் பேரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
அத்துடன் சிவில் அமைப்பின் பிரதிநிதியான ஒஸ்டின் பெர்னாண்டோவும் அரசியலமைப்புச் சட்டத்தினை பிற்பற்றி நியமனத்தினை மேற்கொண்டால் பிரச்சினைகள் இல்லையென்றால்.
இத்தருணத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நிகழ்நிலையில் இணைந்து கொண்டு அவரது கருத்துக்களைக் கூற முயன்றிருந்தபோதும் இணைய வலையமைப்பில் ஏற்பட்ட குழப்பங்களால் தெளிவில்லாத நிலைமையே இருந்தது.
இதனையடுத்து ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமான எல்.எஸ்.ஐ.ஜனரத்ன தொடர்பில் அஜித் பீ பெரோரா முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் கரிசனைகளை செலுத்தி எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாக தெளிவு படுத்த வேண்டும் என்று இணக்கம் காணப்பட்டது.
தொடர்ந்து தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கான பதவி வெற்றிடத்துக்கும் விண்ணப்பமொன்றைக் கோருவதன் ஊடாக அதனை நிரப்பமுடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





