ஜே.வி.பி.யின் மத விரோதச் பிக்குகள் படுகொலைகளை நாடு மறக்கவில்லை; ஐக்கிய தேசியக் கட்சி
விகாரைகளை அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு உள்ளே கொண்டுவரும் நோக்கம் தற்போதைய ஜனாதிபதிக்கு இருப்பதை, அவர் மேற்கொண்ட விவாதங்கள் மூலம் அறிய முடிகிறது.
தற்போதைய அரசாங்கம் மத அதிகாரம் எனும் பெயரில் கொண்டுவர முயற்சிக்கும் சட்ட வரைபானது, பௌத்த மதத்தின் புனிதத்தன்மையையும், விகாரைகளின் தனித்துவத்தையும் அழித்து அவற்றை அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உள்ளே கொண்டுவரும் ஒரு சதித்திட்டம். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் இச்செயற்பாடுகள், பௌத்த மதத்தின் விழுமியங்களுக்கு எதிரானது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கட்சியினால் 31-05-2026 அன்று விடுத்த கண்டன அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முழு உலகமும் மே மாதம் முதலாம் திகதியை வெசாக் போய தினமாக அங்கீகரிக்கும் வேளையில், தற்போதைய அரசாங்கம் வெசாக் போய தினத்தை பிற்போடச் செய்தமை கண்டிக்கத்தக்கது. தேசிய வெசாக் தினம் என்பது வெசாக் பூரண பௌர்ணமி தினமாகும், ஆனால் இம்முறை அரசாங்கம் குறித்த தினத்தில் கொண்டாட்டங்களை முன்னெடுக்காது, அதற்குப் பிற்பட்ட தினத்தில் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடியது புத்தாண்டு காலச் செயற்பாடுகளில் அரசாங்கம் குளறுபடிகளை ஏற்படுத்தியதை நிரூபிக்கின்றது.
கடந்த காலங்களில் பௌத்த மதத்துக்கும், மகா சங்கத்தினருக்கும் எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மேற்கொண்ட வரலாற்றுப் படுகொலைகளை நாடு மறக்கவில்லை. 1987-89 காலப்பகுதியில் கொடிகாவத்த நந்தசிறி, வெல்லொட பக்ஞாதஸ்ஸி, பெலிகல்லே மகிந்த, கும்புக்கொட க்யானலோக்க, அதுருகிரியே பக்ஞாதஸ்ஸி, சொருகூனே பக்ஞாசாரி, ஹல்பொல தர்மபால மற்றும் கண்டி பம்மத்காம்பி உள்ளிட்ட பல பிக்குகளை மக்கள் விடுதலை முன்னணி படுகொலை செய்தது. இத்தகைய வரலாற்றைக் கொண்ட தரப்பினர், இன்று பௌத்த மதத்தின் பாதுகாவலர்களாக வேடமிட்டு, பௌத்த மதத்துக்கு எதிரானதுமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது பாரதூரமான விடயமாகும். அக்காலத்தில் விகாரைகளில் இருந்த பெறுமதிமிக்க வரலாற்றுச் சின்னங்களை கொள்ளையடித்த அதே கரங்களே, இன்று மத அதிகாரம் பற்றி பேசுவது வேடிக்கையானது.
பிக்குகளின் ஒழுக்கம் மற்றும் வினய கர்மங்கள் தொடர்பான விவகாரங்களில் தலையிடுவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. பிக்குகளின் ஒழுக்கநெறி சார்ந்த விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம், மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினருக்கே உரித்தானது. பண்டாரநாயக்க அம்மையார் காலத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றைப் பின்பற்றி, இன்று பிக்குகளை தன்னிச்சையாக நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் அரசாங்கத்தின் செயற்பாடு, விகாரைகளின் புனிதத்தை மாசுபடுத்துவதாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் 105ஆவது பிரிவின் கீழ், பௌத்த மதம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கும், அந்தந்த நிக்காயாக்களின் நிறைவேற்று செயற்குழு சங்க சபைக்குமே வழங்கப்பட்டுள்ளது. இதனை விடுத்து, அமைச்சரவை மூலமாக இத்தகைய சட்டங்களை உருவாக்குவது அரசியலமைப்புக்கு முரணானது.
இந்த மத அதிகாரம் என்ற போர்வையில், விகாரைகள் மற்றும் தேவாலயங்களின் சொத்துக்களை அரசாங்கத்தின் கட்டுப்பாடுக்கு உள்ளே கொண்டுவருவதே இவர்களின் மறைமுக நோக்கம் என்பது தெளிவாகிறது. விகாரைகளை அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு உள்ளே கொண்டுவரும் நோக்கம் தற்போதைய ஜனாதிபதிக்கு இருப்பதை, அவர் மேற்கொண்ட விவாதங்கள் மூலம் அறிய முடிகிறது. இது குறித்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த பௌத்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட எவ்வித கலந்துரையாடலையும் நடத்தாமல், அரசாங்கம் தன்னிச்சையாகவே அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறது.
'பிறப்பால் ஒருவன் தாழ்ந்தவனோ அல்லது உயர்ந்தவனோ ஆவதில்லை; அவனது செயல்களே அவனைத் தீர்மானிக்கின்றன'. ஜனாதிபதியின் இப்போதைய செயற்பாடுகள் அவர் எத்தகைய பாதையைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதை உலகுக்கு உணர்த்துகின்றன. எனவே, மத விவகாரங்களில் அரசாங்கம் தேவையற்ற தலையீடுகளைத் தவிர்த்து, மகா சங்கத்தினரின் ஆலோசனைப்படி தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தங்களது அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளது.





