அரசாங்கம் கூறும் வாக்குறுதிகள் வெற்றிபெறவில்லை: நாமல் ராஜபக்ஷ
அன்று விமர்சனங்களை செய்துவிட்டு அந்த அபிவிருத்தி பணிகளை தற்போது மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னெடுப்பது மகிழ்ச்சிக்குரியது.
அரசாங்கம் கூறும் வாக்குறுதிகள் நடைமுறையில் வெற்றிபெறவில்லை. இதுவே உண்மை. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்தவற்றில் 50சதவீதத்தையாவது நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 24-11-2025 அன்று நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக விமர்சித்தது. வீதிகளை அபிவிருத்தி செய்து அவற்றை சாப்பிடப் போகின்றீர்களா என்றும் கேட்டனர். அன்று விமர்சனங்களை செய்துவிட்டு அந்த அபிவிருத்தி பணிகளை தற்போது மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னெடுப்பது மகிழ்ச்சிக்குரியது.
விமான நிலையங்கள் தொடர்பிலும் கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஒரு காலத்தில் இதனை நெல் களஞ்சியமாகவும் பயன்படுத்தினர். அதனை மூடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் காரணமாக இருந்தது. அதேபோன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கும் போதும் அதற்கு ஆதவாகவே இருந்தது. வடக்கில் வீதி அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் 20 சதவீத முன்னேற்றமே உள்ளது. இந்த ஒரு மாதத்தில் மிகுதி 80 சதவீதத்தையும் நிறைவு செய்ய முடியாதுள்ளது.
துறைமுக விடயத்தில் துறைமுக நெருக்கடியை நிறுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே நெருக்கடியை ஏற்படுத்தி கொள்கலன்கள் வெளியேற்றியதை போன்று மீண்டும் நெருக்கடி நிலைமையை உருவாக்கி மீண்டும் கொள்கலன்களை வெளியேற்ற முயற்சிக்கப்படுகின்றதா என்றும் கேட்க வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும் வரவு செலவுத் திட்டத்தில் புள்ளிகளை பெற்றுக்கொள்ள முயன்றாலும். என்ன நல்ல விடயங்களை கூறினாலும், தொடர்ச்சியாக ஜனாதிபதி நான்கு மணித்தியாலங்கள் கதைத்தாலும் செயல்முறையில் அரசாங்கம் கூறும் வாக்குறுதிகள் நடைமுறையில் வெற்றிப்பெறவில்லை. இதுவே உண்மை. இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்தவற்றில் 50 வீதத்தையாவது நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.





