அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய மாற்றம்: பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி
கடந்த வருடம் வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகள் ஏப்ரல் மாதம் முதல் செலவிடப்பட்ட கண்க்கு அறிக்கைகள் ஜூலை மாதமே வெளிவருகிறது.
மருந்து பொருட்களுக்காக கடந்த வருடத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக இந்த வருடம் செலவிடப்பட்டிருக்கிறது. அத்துடன் அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-11-2025அன்றுஇடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அடுத்த வருடத்துக்கு சுகாதார அமைச்சுக்கு 516.7பில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கி இருக்கிறோம். கடந்த வருடங்களைவிட இது அதிகமாகும். சுகாதார சேவையை உயர் தரத்தில் மேற்கொண்டு செல்வதே எமது எதிர்பார்ப்பாகும். அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள இருக்கும் ஆண்டாகும். இதில் கட்டமைப்பு மாற்றம் கொள்கை மாற்றம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அதேபோன்று அரச வைத்தியசாலைகள் மக்களுக்கு விருப்பமான வைத்தியசாலைகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக வைத்தியசாலை நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அடுத்த வருடத்தில் இதனை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்த இருக்கிறோம். அதேபோன்று வைத்தியசாலைகளில் இடைநடுவில் கைவிடப்பட்டிருக்கும் கட்டிடங்களை பூரணமாக கட்டிமுடிக்க நடவடிக்கை எடுப்போம். அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 2024ஆம் ஆண்டு மருந்து கொள்வனவுக்கு மொத்தமாக 39 பில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது.இந்த வருடம் மருந்து கொள்வனவுக்கு 185 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் கடந்த மாதம்வரை 130 பில்லியன் ரூபா செலவிட்டிருக்கிறோம்.
இந்த வருட இறுதியாகும்போது 160 பில்லியன் ரூபாவரை செலவாகும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் எதிர்க்கட்சியில் உரையாற்றிய பலரும் கடந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 50வீதம் கூட செலவிடப்படவில்லை என தெரிவித்திருந்தனர். அவர்கள் செப்டம்பர் மாத கணக்கு அறிக்கையை பார்த்துக்கொண்டே இவ்வாறு தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகள் ஏப்ரல் மாதம் முதல் செலவிடப்பட்ட கண்க்கு அறிக்கைகள் ஜூலை மாதமே வெளிவருகிறது.இந்த கணக்கறிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு கருத்து தெரிவிப்பது முறையல்ல. அதேபோன்று நாட்டுக்குள் 300 வகையான மருந்து பொருட்களுக்கு தட்டப்பாடு இருப்பதாக உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அதில் எந்த உண்மையும் இல்லை.
உண்மையில், தற்போது 60 வகையான மருந்து பொருட்களில் குறைபாடு இருப்பதாகவே எமக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் அந்த மருந்து பொருட்களை தனியார் துறையில் இருந்து கொள்வனவு செய்ய வைத்தியசாலைகளுக்கு நிதி வழங்கி இருக்கிறோம். பற்றாக்குறை மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு மாத்திரம் வைத்தியசாலைகளுக்கு 34 பில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கிறோம். 2024இல் மொத்தமாக மருந்து பொருட்கள் கொள்வனவுக்கு 39 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு மக்கள் அடிப்படை உரிமையான சுகாதரா உரிமையை உறுதிப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றார்.





