தமிழரசுக்கட்சியின் கூட்டமைப்பு அறிவிப்பை வரவேற்கின்றோம் - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி
இலங்கைத் தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நாங்கள் வெளியேறுவதற்கு காரணமாக இருந்த, கூட்டமைப்பை பதிவு செய்தல், பொதுச்சின்னத்தில் தேர்தலை முகங்கொடுத்தல் ஆகியவையாகும்.
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அறிப்பை ஜனநாயக தமிழ் கூட்டணி வரவேற்பதாக அதன் ஊடகப் பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் 06-11-2025 அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சி முறைகளை விடுத்து அரசாங்கம் ஆளுநர் ஊடாக ஆட்சியை நடத்துவதனை நிறுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கூறி வருகிறது.
இதனடிப்படையில் பார்க்கும்போது அடுத்த வருடமும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. எல்லை நிர்ணய வேலைகளை விரைவில் மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.
இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் சில நிபந்தனைகள் இருப்பதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில் பொதுச்செயலாளருமான சுமந்திரன் கூறியுள்ளார். அவை என்ன நிபந்தனைகள் என்பது எமக்கு இதுவரை தெரியாது பேச்சுவார்த்தை ஊடாக இரு தரப்பினரும் இணைய முடியும். பேசுவதற்கு முன்னர் நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தமில்லை.
அதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நாங்கள் வெளியேறுவதற்கு காரணமாக இருந்த, கூட்டமைப்பை பதிவு செய்தல், பொதுச்சின்னத்தில் தேர்தலை முகங்கொடுத்தல் ஆகியவையாகும்.
அத்துடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்துப்பாக்கிகளை கோரியிருப்பது அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இருக்கலாம். கடந்த அரசாங்கள் அனைத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தது.
இந்த அரசாங்கம் பாதுகாப்பு வழங்காத நிலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கலாம் அரசாங்கம் முதலில் பாதாள உலக குழுக்களை ஒழிக்க வேண்டும் என்றார்.





