எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் எம்.பி.களுக்கு தெளிவிருந்ததா? : தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
எல்லை நிர்ணயம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கம் பற்றி முழுமையான தெளிவு இல்லாமல் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
எல்லை நிர்ணய ஆணைக்குழு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதுமான தெளிவிருந்ததா, அல்லது அறிக்கையின் ஒருபக்கத்தையாவது வாசித்து பார்த்தார்களா என்பது சந்தேகத்துக்குரியதென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எல்லை நிர்ணய குழு அறிக்கை தோற்கடிக்கப்பட்டவுடன் அப்போதைய பிரதமர் தலைமையில் எல்லை நிர்ணய மீளாய்வு குழு நியமிக்கப்பட்டது.இந்த குழு முறையாக செயற்படவில்லை.ஆகவே அந்த குழுவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் அது சிறந்ததாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் பெப்ரல் அமைப்பு 28-08-2025அன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த கலந்துரையாடலில் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டதாவது,
எல்லை நிர்ணயம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கம் பற்றி முழுமையான தெளிவு இல்லாமல் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.அதனால் தான் இந்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கா, அல்லது தேர்தலை நடத்துவதற்காக எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவை நியமிக்கப்பட்டது என்ற சந்தேகமும் எமக்கிருந்தது.அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை வழங்க ஒருதரப்பினர் இருந்தார்கள்.அவர்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று ஒரே கயிற்றையே ஆலோசனையாக வழங்கினார்கள்.
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை பாராளுமன்றம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். புதிய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.
எல்லை நிர்ணய குழு அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இரண்டுமாத காலத்தை நிர்ணயித்து எல்லை நிர்ணய மீளாய்வு குழு நியமிக்கப்பட்டது.இருப்பினும் இந்த குழு ஒருமுறை கூடவில்லை.அப்போதைய பிரதமர் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது.அந்த குழுவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் அது சிறந்ததாக அமையும்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய குழு அறிக்கையின் ஒரு பக்கத்தையாவது பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமானது என்றார்.
2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் தோற்டிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எல்லை நிர்ணய மீளாய்வு குழு ஒன்றை நியமித்தார்.இருப்பினும் இந்த குறித்த காலத்துக்குள் மீளாய்வு அறிக்கையை தயாரிக்கவுமில்லை,பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





