வாராந்தம் புதன்கிழமை அரச விடுமுறை அரசாங்கம் பிரகடனம்
சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல் மற்றும் சுங்கம் உள்ளிட்ட அத்தியாவசிய அரச சேவைகள் இந்த தீர்மானத்தில் உள்வாங்கப்படமாட்டாது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையால் வலுசக்தி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் கருத்திக் கொண்டு, வலுசக்தி பாவனையை குறைக்கும் நோக்கில் வாராந்தம் புதன்கிழமையை அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல் மற்றும் சுங்கம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் அதேவேளை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்ற கட்டமைப்புக்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 16-03-2026 அன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த தீர்மானம் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையால் வலுசக்தி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் கருத்திக் கொண்டு, எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது மேற்கூறிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு புதன்கிழமையையும் அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல் மற்றும் சுங்கம் உள்ளிட்ட அத்தியாவசிய அரச சேவைகள் இந்த தீர்மானத்தில் உள்வாங்கப்படமாட்டாது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்ற கட்டமைப்புக்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.
அத்தோடு சகல அரச உற்சவங்களையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இரத்து செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனியார் துறையையும் இதில் உள்வாங்குவது குறித்து அவதானம் செலுத்துமாறு வர்த்தக சேவை மற்றும் இலங்கை சேவை சங்கம் என்பவற்றிடம் கோரப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை, தொழிற்சாலைத்துறை, சுகாதாரத்துறை, விவசாயத்துறை மற்றும் கைத்தொழில் துறை என்பவற்றுக்கு தேவையான எரிபொருள் தொடர்பில் மதிப்பீடு செய்து அதற்கமைய எரிபொருளை விநியோகிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு 4 பிரதான குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொது சேவைகளை முன்னெடுத்துச் செல்லல் குறித்து பிரதமர் தலைமையிலும், வலுசக்தி தொடர்பான குழு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலும், அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளித்தல் மற்றும் கண்காணிப்பு தொடர்பான குழு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலும், நலன்புரி சேவைகள் தொடர்பான குழு அமைச்சர் உபாலி பன்னிலகே தலைமையிலும் நியமிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை தவிர்ந்த ஏனைய 4 நாட்களிலும் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் அவற்றின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது எரிபொருள் கையிருப்பு காணப்பட்டாலும், எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய தட்டுப்பாடுகள் குறித்த மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கியூ.ஆர். குறியீட்டு முறைமையில் காணப்படும் தொழிநுட்க சிக்கல்கள் ஓரிரு தினங்களில் தீர்வு வழங்கப்படும்.
இணையவழியூடான கல்வி செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் பல்கலைக்கழங்கள் அது தொடர்பில் தீர்மானிப்பதற்கு கல்வி அமைச்சிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் குறித்த தினங்களில் பாரியளவில் கால தாமதங்கள் ஏற்படாது. சிறு மாற்றங்கள் ஏற்படக் கூடும். தற்போது ஒரு மாத காலத்துக்கு போதுமான எரிபொருள் இருப்பில் உள்ளது. ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்ட 4 எரிபொருள் கப்பல்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளன என்றார்.
இதேவேளை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவிக்கையில், வலுசக்தி பாவனையை குறைப்பதே இந்த தீர்மானத்தின் ஊடாக அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சினால் உரிய வழிகாட்டல்கள் வெளியிடப்படும். பி;ரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் என்வற்றின் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. மின்சாரம் மற்றும் எரிபொருள் என்பவற்றின் வரையறுக்கப்பட்ட பாவனை தொடர்பில் 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தை நடைமுறைப்படுத்துமாறும் சகல அரச நிறுவனங்களுக்கும் அறிவுத்தப்படுகிறது என்றார்.





