பௌத்த பிக்குகளின் போதைப்பொருள் கடத்தலில் சந்தேகம் - கஸ்ஸப தேரர்
குஷ் உள்ளிட்ட சகல விதமான போதைப்பொருள் பழக்கங்களுக்கும் இந்த பிக்குகள் அங்குள்ள அரசியல் பின்புலத்தாலேயே பழக்கப்படுத்தப்படுகின்றனர்.
நாட்டில் பௌத்த பிக்குகளின் ஒழுக்கத்தைச் சீரழிப்பதற்கும் அவர்களை குஷ் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் சிக்க வைப்பதற்கும் சில அரசியல் சக்திகள் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுகின்றன. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றின் மாணவர் அமைப்புகள் இளம் பிக்குகளின் மனதை விகாரப்படுத்தி அவர்களை அநாகரிகமான நிலைக்குத் தள்ளுகின்றன என பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்தார்.
அண்மையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தாய்லாந்திலிருந்து குஷ் போதைப்பொருளைக் கடத்தி வந்த குற்றச்சாட்டில் பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாரிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தாய்லாந்தில் தடை செய்யப்படாத இந்த குஷ் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வருவதற்கு, பிக்குகளைக் கடத்தல் கும்பல்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளனரா என்பது குறித்து ஆழமாக விசாரிக்கப்பட வேண்டும்.
இளமைக் காலத்தில் பிரிவெனா கல்வியின் மூலம் சிறந்த ஒழுக்கத்தைப் பயிலும் ஒரு பிக்கு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பின்னரே முழுமையாக மாற்றமடைகின்றார். பல்கலைக்கழகங்களில் இயங்கும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றின் மாணவர் சங்கங்கள், இந்தப் பிக்குகளுக்கு மார்க்சியச் சிந்தனைகளைத் தவறான முறையில் போதிக்கின்றன. இதன் விளைவாக சாந்தமான குணமுடைய பிக்குகள் பல்கலைக்கழக சூழலில் கடும்போக்குடையவர்களாகவும் அநாகரிகமானவர்களாகவும் மாற்றப்படுகின்றனர். குஷ் உள்ளிட்ட சகல விதமான போதைப்பொருள் பழக்கங்களுக்கும் இந்த பிக்குகள் அங்குள்ள அரசியல் பின்புலத்தாலேயே பழக்கப்படுத்தப்படுகின்றனர்.
பௌத்த சாசனத்தை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அவமதிப்பதற்காகவே இவ்வாறான உபாயங்கள் கையாளப்படுகின்றன. கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான பிக்குகளா அல்லது கடத்தல் தேவைக்காக மொட்டையடிக்கப்பட்டுச் சீருடை அணிவிக்கப்பட்டவர்களா என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அரசாங்கமும் சில இடதுசாரி அரசியல் கட்சிகளும் தங்களுக்குப் பிடிக்காத பிக்குகளைப் பழிவாங்குவதற்காக அல்லது பௌத்த அடையாளத்தைச் சிதைப்பதற்காக இவ்வாறான போதைப்பொருள் விவகாரங்களைப் பின்னணியில் இருந்து இயக்குகின்றனவா என்ற பலத்த சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஒரு சிங்கள - பௌத்த எதிர்ப்பு அரசாங்கமாகும். பௌத்த மதகுருமார் மீதும் பௌத்த விழுமியங்கள் மீதும் இந்த அரசு தொடர்ச்சியாகத் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றது. கத்தோலிக்க மதகுரு ஒருவருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக பொலிஸ் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்த இந்த அரசு பிக்குகள் தாக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்தது மாத்திரமன்ற, பிக்குகளுக்கு எதிராகவே வழக்குகளையும் தாக்கல் செய்தது.
இவ்வாறான ஒரு பௌத்த விரோதச் சூழலில் பிக்குகள் குஷ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறப்படும் செய்திகள் ஒரு திட்டமிட்ட நாடகமாகவே இருக்கக்கூடும். பிக்குகள் தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டிக்கப்படுவதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்தத் தவறைச் செய்வதற்குப் பிக்குகளைத் தூண்டிய அல்லது அவர்களைப் பயன்படுத்திய அரசியல் சக்திகள் மற்றும் கடத்தல்காரர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும்.
மக்களை நல்வழிப்படுத்துவதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று பிக்குகளின் ஒழுக்கச் சீரழிவிற்கு மறைமுகமாகப் பங்களிப்புச் செய்கின்றனர். பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் ஊடாக பிக்குகளின் மனதைச் சிதைத்து அவர்களைப் போராட்டங்களிலும் ஒழுக்கமற்ற செயல்களிலும் ஈடுபடுத்தும் இவர்களின் அரசியல் கலாசாரம் மிகவும் ஆபத்தானது. 60000 உயிர்களைத் தியாகம் செய்து கட்டியெழுப்பப்பட்ட ஒரு இயக்கம், இன்று தேசத்தின் ஆன்மீக அடையாளமான பிக்குகளைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது என்றார்.





