ஜனாதிபதியின் கருத்துக்கள் ஏமாற்றமளித்துள்ளன - இளையதம்பி சிறீநாத்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகைத் தந்த ஜனாதிபதி, பல அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதிகளை வழங்கியிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகைத் தந்த ஜனாதிபதி, தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றன அரசியல் தீர்வு தொடர்பாகவோ, மாகாண சபைகள் தொடர்பாகவோ, நீதி வழங்கல் தொடர்பாகவோ எந்த விடயங்களையும் கூறவில்லை. இது தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது. என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறீநாத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-05-2026 அன்று நடைபெற்ற அமர்வின்போது நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: கடந்த வாரம் தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அதன்போது கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தளர்வு போக்கு செய்யப்பட்டிருந்தாலும் பல இடங்களில் இன்னும் நெருக்கடி நிலைமைகள் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. என்ன காரணத்திற்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கான அரசியல் தீர்வுகள் சம்பந்தமாக எந்த முன்முயற்சிகளுக்கும் இல்லை இந்த விடயங்களை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகைத் தந்த ஜனாதிபதி, பல அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதிகளை வழங்கியிருந்தார். அதனை வரவேற்கின்றோம். தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வு தொடர்பாகவோ, மாகாண சபைகள் தொடர்பாகவோ, நீதி வழங்கல் தொடர்பாகவோ எந்த விடயங்களையும் கூறவில்லை. இது தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஏமாற்றமாகவே இருக்கிறது.
நாட்டின் பொருளாதார நிலைமைகளை சமப்படுத்துவதற்கான செயற்பாடுகள் அவசியமானது. ஆனால் கடந்த காலங்களில் யுத்தத்தினால் தமிழ் மக்கள் ஈடுபாட்டுடன் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலைமை இருந்தது. இவ்வாறு அரசியல் ஸ்தீரத்தன்மை இருந்தது. இதற்கு தீர்வுகாண வேண்டிய பாரிய பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு உள்ளது. இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் கண்டும் காணாமலும் இருக்கின்றது என்றார்.





