தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரேமதிலக்கவுக்கு 6 வருட சிறை தண்டனை
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இந்த தண்டனையை விதித்தது.
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவினை நடைமுறைப்படுத்துவதை உதாசீனம் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், நீதிமன்றை அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.பி.எஸ். பிரேமதிலக்கவுக்கு 6 வருட சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2024 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவினை நடைமுறைப்படுத்துவதைத் தவிர்த்ததன் ஊடாக நீதிமன்றத்தை அவமதித்ததாக குறித்த பணிப்பாளர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அது நிரூபிக்கப்பட்டதை அடுத்து உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை அளித்தது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இந்த தண்டனையை விதித்தது. சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 3 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், அந்த அபராதத் தொகையைச் செலுத்துவதற்கு குற்றவாளி தவறினால் மேலதிகமாக மற்றுமொரு வருட சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டி வரும் எனவும் நீதிமன்றம் எச்சரித்தது.





