பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம்
6ஆவது பாகிஸ்தான் - இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு கலந்துரையாடல், ஸ்ரீ ஜயவர்த்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் இன்றையதினம் ஜூலை 03 ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மட் அலி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
6ஆவது பாகிஸ்தான் - இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, அவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கை வந்தடைந்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர் தலைமையிலான தூதுக்குழுவினரை, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ஹர்ஷ விதான ஆராய்ச்சி, இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.
6ஆவது பாகிஸ்தான் - இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு கலந்துரையாடல், ஸ்ரீ ஜயவர்த்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் இன்றையதினம் ஜூலை 03 ஆரம்பமாகவுள்ளது.
இந்த உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடலானது, இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்கும், பிராந்திய பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு, பயிற்சிகள் மற்றும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்புப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் முக்கிய தளமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மட் அலி, தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





