ரவுல் காஸ்ட்ரோ மீது அபத்தமான குற்றச்சாட்டு - முன்னிலை சோசலிசக் கட்சி
பெரும் வெளிப்புற அழுத்தங்கள் மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட நீண்டகால பொருளாதாரக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், கியூபப் புரட்சியானது ஏகாதிபத்திய ஆதிக்கம் மற்றும் நவதாராளவாத சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பின் சின்னமாகத் தொடர்ந்து விளங்குகிறது.
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ மீது அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம், வெனிசுவேலா ஜனாதிபதியைக் கடத்தியபோது கையாண்ட அதே ஜனநாயக விரோத முறைகளை கியூபாவிலும் செயல்படுத்த அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சி தயாராகி வருகின்றது. இறையாண்மை கொண்ட நாடுகள் மீது, குறிப்பாக கியூபக் குடியரசுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் கருவிகளாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அரசியல் குற்றச்சாட்டுகள், சட்ட நிர்ப்பந்தம் மற்றும் பிரச்சாரப் பரப்புரைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதனை வன்மையாக கண்டிக்கிறோம் என முன்னிலை சோசலிசக் கட்சி அறிவித்துள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், கியூபாவின் புரட்சிகரத் தலைமை மற்றும் அதன் அரச நிறுவனங்கள் குறிவைக்கப்படுவதை, பல தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக நீடித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரோதப் போக்கு, பொருளாதாரத் தடை மற்றும் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சிகள் ஆகியவற்றின் பரந்த வரலாற்றுப் பின்னணியில் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய முதலாளித்துவ ஆதிக்கக் கட்டமைப்புக்கு வெளியே, சுதந்திரமான வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு நாட்டையும் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொடர்ச்சியான உத்தியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் அமைகின்றன.
தலையீட்டுக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் ஒருதலைப்பட்சமான வரலாற்று விளக்கங்களையும் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். இத்தகைய நடைமுறைகள், நாடுகளின் இறையாண்மை சமத்துவம், உள் விவகாரங்களில் தலையிடாமை மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுகின்றன.
பெரும் வெளிப்புற அழுத்தங்கள் மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட நீண்டகால பொருளாதாரக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், கியூபப் புரட்சியானது ஏகாதிபத்திய ஆதிக்கம் மற்றும் நவதாராளவாத சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பின் சின்னமாகத் தொடர்ந்து விளங்குகிறது. அதன் தலைமையின் சட்டப்பூர்வத் தன்மையை நீக்குவதற்கான முயற்சிகள், சாராம்சத்தில், கியூப மக்களின் அரசியல் உறுதியைப் பலவீனப்படுத்துவதற்கும் அவர்களின் வரலாற்றுச் சாதனைகளைப் பின்னோக்கி தள்ளுவதற்குமான முயற்சிகளே ஆகும்.
கியூபாவின் இறையாண்மை, அரசியல் அமைப்பு மற்றும் வெளிப்புற நிர்ப்பந்தமின்றி அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில், கியூப மக்களுக்கு முன்னிலை சோசலிசக் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் உலகெங்கிலும் உள்ள முற்போக்கு, சோசலிச மற்றும் ஜனநாயக இயக்கங்களை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார, அரசியல், இராணுவ மற்றும் சித்தாந்த ரீதியான ஆக்கிரமிப்புகளின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான அவர்களது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தவும், அமைதி, சமத்துவம் மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்தின் கொள்கைகளைப் பாதுகாக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் அனைத்து புரட்சிகர சக்திகளின் மையப் பணியாகவே நீடிக்கிறது. ஆதிக்கத்தை எதிர்ப்பவர்களுடனேயே வரலாறு நிற்கும், அதைத் திணிப்பவர்களுடன் அல்ல என்று அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





