பிரதமர்- நெதர்லாந்து தூதுவர் சந்திப்பு
பல தசாப்தகால இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் இருநாடுகளுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்ட நீண்டகால நல்லுறவு குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர்.
பேரனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் சேதமடைந்த நிலையில் இருக்கும் பாலங்களைப் புனரமைத்து மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் உறுதியளித்துள்ளார்.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கிவருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் 03-12-2025 அன்று பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவருக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கைக்கு உதவுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பல தசாப்தகால இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் இருநாடுகளுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்ட நீண்டகால நல்லுறவு குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர்.
அத்தோடு அண்மைய அனர்த்தத்திலிருந்து இலங்கை மீள ஆரம்பித்திருக்கும் தற்போதைய சவாலான காலப்பகுதியில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு வலியுறுத்தப்பட்டது. அதற்கமைய அனர்த்தப் பாதிப்புக்களைக் குறைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தல் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்தல் ஆகியவற்றில் எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிமுறைகள் குறித்தும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான உறுதியான மீள்கட்டுமானம், மேம்பட்ட நீண்டகாலத் திட்டமிடல் மற்றும் தேவைப்படும் உதவிகள் என்பன குறித்தும் இருதரப்பினரும் ஆராய்ந்தனர்.
இதன்போது இலங்கையில் சேதமடைந்த பாலங்களைச் சீரமைத்து மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசரத்தேவை இருப்பதனால், நாடு முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ள பாலங்களைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமரிடம் நெதர்லாந்து தூதுவர் தெரிவித்தார்.





