தெனியாய புதிய ஆதார வைத்தியசாலை: இலங்கை – இந்தியாவுக்கு இடையில் உடன்படிக்கை கைச்சாத்து
சுமார் 6,000 மில்லியன் ரூபா முதலீட்டில் இரண்டு கட்டங்களின் கீழ் 300 படுக்கைகளைக் கொண்ட நவீன ஆதார வைத்தியசாலையாக இது நிர்மாணிக்கப்படவுள்ளது.
'தித்வா' சூறாவளியால் பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு மாற்றப்படவுள்ள புதிய தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு, சுமார் 600 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கான இந்தியா – இலங்கைக்கி்டையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 13-07-2026அன்று கைச்சாத்திடப்பட்டது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்திய அரசாங்கத்தின் 'திட்வா சூறாவளிக்குப் பின்னரான சுகாதார உள்கட்டமைப்பு மறுசீரமைப்புத் திட்டத்தின்' கீழ் இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
தற்போதைய தெனியாய ஆதார வைத்தியசாலை அமைந்துள்ள நிலப்பரப்பு மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்த அபாயங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாலும், வைத்தியசாலைச் சேவைகளை விரிவாக்குவதற்கு போதிய இடவசதி இன்மையாலும், அதனைப் பாதுகாப்பான புதிய இடத்திற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, தெனியாய நகரிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹேண்ட்ஃபோர்ட் தோட்டத்தில் இதற்கான காணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 6,000 மில்லியன் ரூபா முதலீட்டில் இரண்டு கட்டங்களின் கீழ் 300 படுக்கைகளைக் கொண்ட நவீன ஆதார வைத்தியசாலையாக இது நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டத்தின் கீழ் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் மகப்பேற்று விடுதிகள், அறுவை சிகிச்சைக்கூடங்கள், தீவிர சிகிச்சைப்பிரிவுகள், அவசர விபத்துப் பிரிவு மற்றும் குருதி வங்கி என்பன அமைக்கப்படவுள்ளன. இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இதன் கட்டுமானப் பணிகளை 3 வருடங்களுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்போது சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில், இவ்வுடன்படிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும் பலமான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் உறுதிப்படுத்தும் ஒரு வரலாற்று நிகழ்வாகும். இயற்கை அனர்த்த அபாயத்தினால் புதிய இடத்திற்கு மாற்றப்படும் தெனியாய வைத்தியசாலைக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அரசாங்கம் வழங்கும் 600 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரண உதவி, இலங்கையின் சுகாதாரத் துறைக்குக் கிடைத்த விசேட ஆதரவாகும்.
இதற்காக இந்திய அரசாங்கத்துக்கும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நவீன உபகரணங்கள் மூலம் மாத்தறை மாவட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமப்புற மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான, தரமான சுகாதாரச் சேவைகளை வழங்க முடியும் என்றார்.





