டொனால்ட் டிரம்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார
'இலங்கைக்கு மிகவும் அவசியமானதொரு தருணத்தில் மீண்டும் மீண்டும் எம்மோடு நிற்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
பேரனர்த்த வேளையில் அமெரிக்கா தொடர் உதவிகளை வழங்கிவருவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு நன்றி தெரிவித்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இவ்வுதவிகள் ஜனநாயகக்கோட்பாடுகள் மற்றும் இருநாட்டு மக்கள் தொடர்புகளை அடிப்படையாகக்கொண்டு இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வலுவாக வேரூன்றியிருக்கும் நல்லுறவைக் காண்பிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள், இலங்கைக்குப் பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கிவருகின்றன.
அதற்கமைய அமெரிக்கா பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதற்கென இலங்கையிலுள்ள சர்வதேச உதவி முகவரமைப்புக்கள் ஊடாக முதற்கட்டமாக 2 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியது.
அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் உயிர்காக்கும் நோக்கில் உடனடி உதவியாக 2 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாக அறிவித்தது.
அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசியமான மனிதாபிமான நிவாரணப்பொருட்களை ஏற்றிய அமெரிக்க விமானம் நேற்று முன்தினம் (8) யாழ். பலாலி சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தது.
இவ்வாறு அமெரிக்கா வழங்கிவரும் தொடர் உதவிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவின் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
'இலங்கைக்கு மிகவும் அவசியமானதொரு தருணத்தில் மீண்டும் மீண்டும் எம்மோடு நிற்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
2 மில்லியன் டொலர் உடனடி நிதியுதுவி மற்றும் சி-130 விமானத்தின் வருகை என்பன ஜனநாயகக்கோட்பாடுகள் மற்றும் இருநாட்டு மக்கள் தொடர்புகளை அடிப்படையாகக்கொண்டு இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வலுவாக வேரூன்றியிருக்கும் நல்லுறவைக் காண்பிக்கின்றன' என ஜனாதிபதி தனது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





