அனோஜனுக்கு கருணை மன்னிப்பு கோரி சவூதி மன்னருக்கு முஸ்லிம் எம்.பிக்கள் கடிதம்
சவுதி அரேபியாவின் சட்ட அதிகாரம், இறையாண்மை மற்றும் நீதித்துறை நிறுவனங்களுக்கு தாங்கள் முழுமையான மதிப்பளிப்பதாகவும் அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான சிவரசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு கோரி, சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத்துக்கு இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், பிரதி அமைச்சர்களான முனீர் முளப்பர் மற்றும் அர்கம் இல்யாஸ் உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
அனோஜன் தனது செயலுக்காக மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன், நபிகள் நாயகம் முஹம்மது மற்றும் முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு தனது ஆழ்ந்த மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அனோஜனின் குடும்பம் எதிர்நோக்கும் வறுமை நிலை மற்றும் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு ஆகியவற்றை கருத்திற்கொண்டு, அல்லாஹ்வின் கருணையுடன் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை குறைக்கவோ அல்லது அபராதத் தொகையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்யவோ நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அனோஜன் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளி எனவும், இலங்கையில் உள்ள அவரது குடும்பம் அவரது வருமானத்தையே பெரிதும் நம்பியுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, சவுதி அரேபியாவின் சட்ட அதிகாரம், இறையாண்மை மற்றும் நீதித்துறை நிறுவனங்களுக்கு தாங்கள் முழுமையான மதிப்பளிப்பதாகவும் அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கோரிக்கை முழுமையான மனிதாபிமான அடிப்படையில் முன்வைக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.





