நாமலுக்கு 23வரை விளக்கமறியல்
தற்போது புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் அந்த அதிகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ளது.
ஸ்ரீலங்கன் நிறுவனத்துக்கு எர்பஸ் கொள்வனவின் போது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழக்கு 16-09-2026அன்று கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக்க பண்டார விடயங்களை முன்வைக்கையில், “கனம் நீதிவான் அவர்களே, இந்த வழக்கு தொடர்பான விசாரணை உள்ளடக்கத்தை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும், தாமதமின்றி சந்தேகநபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷ பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமையவே சந்தேகநபர் இன்று மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரிடம் கடந்த திங்கட்கிழமை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த விசாரணை பிரான்ஸ் எயார்பஸ் நிறுவனம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 16 எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பிலேயே ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வழக்கு தொடர்பில் இந்த சந்தேகநபர், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நீதிமன்றத்தின் முன்னால் உள்ள வழக்கு சந்தேகநபர்களுக்கு எதிராகப் பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதற்கு காரணம் இதற்கு முன்னர் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பணச் சுத்திகரிப்புக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரமிருக்கவில்லை. ஆனால் தற்போது புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் அந்த அதிகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ளது.
அதற்கமைய இவ்விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு என்பவற்றினால் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது சர்வதேச உதவியுடன் இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் தொடர்பில் முறையான ஆராயப்பட்டு வருகிறது. எனவே தாமதமின்றி சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.





