22 ஆவது திருத்தத்துக்கு எதிரான இளம் சட்டத்தரணிகளின் குரல்கள் வரவேற்கத்தக்கவை: ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்
பலர் கனிஷ்ட சட்டத்தரணிகளாகவும் அறிவுறுத்தும் சட்டத்தரணிகளாகவும் செயற்பட்டனர்.
நீதித்துறையின் சுயாதீனத்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இளம் சட்டத்தரணிகள் பலர் முன்வந்து செய்த சமர்ப்பணங்களும், அவர்களது பங்களிப்பும் வரவேற்கத்தக்கவையாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் (2) நிறைவுசெய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து சாலிய பீரிஸ் அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கடந்த இரண்டு நாட்களில் நீதித்துறையின் சுயாதீனத்துவத்தைப் பாதுகாப்பதற்காக இளம் சட்டத்தரணிகள் பலர் முன்வந்து செய்த சமர்ப்பணங்களும், அவர்களது பங்களிப்பும் பெரிதும் வரவேற்கத்தக்கவையாகும்.
அதுமாத்திரமன்றி பலர் கனிஷ்ட சட்டத்தரணிகளாகவும் அறிவுறுத்தும் சட்டத்தரணிகளாகவும் செயற்பட்டனர். இவ்விடயத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கும் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் இளம் சட்டத்தரணிகள் வலுவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது சிறப்பான விடயமாகும்.





