யார் எத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் பின்வாங்கப்போவதில்லை: ஜனாதிபதி அநுர
டிஜிட்டல் கட்டமைப்பு அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு டிஜிட்டல் அடையாள அட்டையை அடுத்த வருடம் மூன்றாவது காலாண்டில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
யார் எத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் அடுத்த வருடம் மூன்றாவது காலாண்டில் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 07-11-2025 அன்று 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
டிஜிட்டல் கட்டமைப்பு அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு டிஜிட்டல் அடையாள அட்டையை அடுத்த வருடம் மூன்றாவது காலாண்டில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் டிஜிட்டர் அடையாள அட்டையை தயாரிக்கும்போது எமது தரவுகள் வெளிநாடுகளுக்கு செல்லும். அதனால் அதற்கு அனுமதிக்கப்போவதில்லை என சிலர் நீதிமன்றம் சென்றனர். என்றாலும் நீதிமன்றம் டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரித்தமைக்கு நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது தரவு எதுவும் வெளிநாடுகளுக்கு செல்லாது என்ற உத்தரவாத்தை நாங்கள் வழங்குவோம். இந்த நவீன காலத்தில் டிஜிட்டர் அடையாள அட்டை அவசியமாகும். எனவே எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் டிஜிட்டர் அடையாள அட்டையை தயாரிக்கும் பணியை நிறுத்தப்போவதில்லை என்றார்.





