பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயார்: இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்
அனர்த்தங்களுக்குள்ளாகும் தன்மையை குறைத்தல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இலங்கையில் புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களை மீளக்கட்டியெழுப்புதல், விவசாயத் துறையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராகவுள்ளது.வலுவான சட்ட, நிர்வாக மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளின் ஆதரவுடன், பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான வினைத்திறன் மிக்க பொறிமுறைகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
நாடு மிக மோசமான இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்ட போது இந்திய அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காகத் தனது நன்றியையும் பாராட்டையும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் 23-12-2025 அன்று அலரி மாளிகையில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடினார்.
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, இலங்கை மீளக்கட்டியெழுப்பும் பணிகளை ஆரம்பித்துள்ள இத்தருணத்தில், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாகவே இந்த சந்திப்பு அமைந்தது.
இலங்கையில் புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களை மீளக்கட்டியெழுப்புதல், விவசாயத் துறையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன்,வலுவான சட்ட, நிர்வாக மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளின் ஆதரவுடன், பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான வினைத்திறன் மிக்க பொறிமுறைகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் செவ வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பினரும் தற்போதைய நிவாரண முயற்சிகளை மீளாய்வு செய்ததுடன், மீட்பு நடவடிக்கைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்தனர்.
'தித்வா ' சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின்னரான மீட்புச் செயற்பாடானது, உடனடி நிவாரண முயற்சிகளுக்கு அப்பால் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புதல் போன்ற நீண்டகால நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது எனக் குறிப்பிட்ட பிரதமர், இதன்போது இந்திய அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காக தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதன் ஓர் அங்கமாகவே பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். அனர்த்த நேரத்தின்போது வெளிப்பட்ட மக்களின் ஒற்றுமை, அவர்களின் தன்னார்வத் தொண்டு மற்றும் கூட்டுச் செயற்பாடுகளை பாராட்டிய பிரதமர், ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம், அனர்த்தங்களுக்குள்ளாகும் தன்மையை குறைத்தல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால், இணைச் செயலாளர் சந்தீப் குமார் பேயப்பு, பிரதித் தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே ஆகியோரும், இலங்கைத் தரப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் சாணிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தெற்காசியா) சமந்த பத்திரண மற்றும் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டயானா பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.





