இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 19 வெளிநாட்டவர்கள் கைது
சந்தேகநபர்களிடமிருந்து 399 கையடக்கத் தொலைபேசிகள், 14 மடிக்கணினிகள், 2 டெஸ்க்டாப் கணினிகள், 473,870 ரூபா பணம் மற்றும் சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 600 சிகரெட்டுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குடிவரவு - குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டினுள் தங்கியிருந்து சட்டவிரோத இணையத்தளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 19 வெளிநாட்டவர்கள் அடங்கிய குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொம்பனித்தெரு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்பனித்தெரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த ஹோட்டலின் 11 மற்றும் 12 ஆவது மாடிகளில் உள்ள அறைகளைச் சோதனையிட்ட போதே மேற்படி சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர். பெருநாட்டுப் பெண் ஒருவரும் 18 சீனப் பிரஜைகளும் இவ்வாறு கைதாகியுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 399 கையடக்கத் தொலைபேசிகள், 14 மடிக்கணினிகள், 2 டெஸ்க்டாப் கணினிகள், 473,870 ரூபா பணம் மற்றும் சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 600 சிகரெட்டுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அவர்கள் இலங்கையில் தங்கியிருப்பதற்கான செல்லுபடியாகும் கடவுச்சீட்டோ அல்லது விசா அனுமதிப்பத்திரமோ வைத்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் 25 முதல் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





