இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தலையீடு: ஹர்ஷன ராஜகருண எம்.பி.
சபாநாயகருக்கு எதிராக பதவி நீக்கப்பட்ட பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக பதவி நீக்கப்பட்ட பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் பாராளுமன்ற செயலாளரிடம் விளக்க அறிக்கை கோரியுள்ளார்.இது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தலையீடு செய்யும் செயற்பாடாகும். இந்த முறையற்ற செயற்பாடு குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ன ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 05-02-2026 அன்று நடைபெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 3 ஆம் பந்தியில் ' இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் கருமங்களில் தலையிடுவது மற்றும் விசாரணைகளுக்குரிய ஆவணங்களை தனிப்பட்ட முறையில் திரட்டுதல், அல்லது அழித்தல் கடும் தண்டனைக்குரிய குற்றம்' என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக பதவி நீக்கப்பட்ட பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் விளக்க அறிக்கை கோரியுள்ளார்.இது முற்றிலும் தவறானது. இலஞச ஊழல் ஆணைக்குழு இந்த செயற்பாடு குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் சட்டத்துக்கு சபாநாயகரும் கட்டுப்பாட வேண்டும். அவரோ அல்லது அவரது தனிப்பட்ட செயலாளரோ அப்பாற்பட்டவர்கள் அல்ல, சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்த கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.





