அரச பொறிமுறையை சீர் குலைப்பதற்காக அரசியலமைப்பு பேரவை திட்டமிட்டு செயற்படுகிறது: அமைச்சர் நளிந்த
அரச பொறிமுறையை சீர் குலைப்பதற்காகவே அரசியலமைப்பு பேரவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
பரிந்துரைக்கப்படுபவரை விட, பிரிதொருவர் தகுதியானவர் எனக் கூறும் உரிமை அரசியலமைப்பு பேரவைக்கு இல்லை. அரச பொறிமுறையை சீர் குலைப்பதற்காகவே அரசியலமைப்பு பேரவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பரந்தளவில் சிந்தித்து செயற்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு 30-12-2025 கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 153 மற்றும் 41 சி உறுப்புரைக்கமைய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான பெயர் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும். ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் அந்த பெயர் அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் 153ஆம் உறுப்புரைக்கமைய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியுடைய கணக்காய்வாளர் ஒருவரே பரிந்துரைக்கப்படுவார்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 'தகுதியுடைய கணக்காய்வாளர்' என்ற ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதி 4 சந்தர்ப்பங்களில் தனது பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். அதனை யாருக்கும் சவாலுக்குட்படுத்த முடியாது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய தகுதியுடைய பெயர்களையே அவர் பரிந்துரைத்தார்.
இரு சந்தர்ப்பங்களில் நிரந்தர நியமனங்களுக்கான பெயர்களை பரிந்துரைத்தார். இவை தவிர ஏனைய இரு சந்தர்ப்பங்களிலும் கணக்காய்வாளர் திணைக்களத்திலுள்ள சிரேஷ்ட கணக்காய்வு அதிகாரிகளது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் இந்த பெயர்கள் அனைத்தும் அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டன.
அரச பொறிமுறையை சீர் குலைப்பதற்காகவே அரசியலமைப்பு பேரவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. பரிந்துரைக்கப்படுபவரை விட, பிரிதொருவர் தகுதியானவர் எனக் கூறும் உரிமை அரசியலமைப்பு பேரவைக்கு இல்லை. பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர் பதவிக்கு தகுதியானதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மாத்திரமமே அரசியலமைப்பு பேரவைக்கு காணப்படுகிறது.
அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுவார்களாயின் , தேசிய தேவையை கவனத்தில் கொண்டு செயற்படவில்லை எனில் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்வது மிகக் கடினமாகும். அவர் பரந்தளவில் சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கு காணப்படுகிறது என்பதை நினைவுபடுத்துகின்றோம் என்றார்.





