ஜனாதிபதி ஊடகப்பிரிவு பெயர் விபரங்கள்; அமைச்சர் நளிந்த ஆராய முடிவு
ஜனாதிபதி ஊடகப்பிரிவு அங்கத்தவர்களின் விபரங்கள் வெளியிட முடியாது என்று வெளியிடப்பட்டுள்ளமைக்கு குறித்த தகவல் வழங்கும் அதிகாரி காரணங்களை குறிப்பிட்டிருப்பார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியிட முடியாது என்பது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியிட முடியாது என்று விடுக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை. அந்த விடயம் அமைச்சரவையுடன் தொடர்புபட்டதல்ல.
எவ்வாறாயினும் தகவல் அறியும் சட்டத்தினை பலப்படுத்தி தகவல்களை வெளியிடுவதையே நாம் இலக்காகக் கொண்டுள்ளோம். ஜனாதிபதி ஊடகப்பிரிவு அங்கத்தவர்களின் விபரங்கள் வெளியிட முடியாது என்று வெளியிடப்பட்டுள்ளமைக்கு குறித்த தகவல் வழங்கும் அதிகாரி காரணங்களை குறிப்பிட்டிருப்பார்.
ஆகவே அக்காரணங்களின் அடிப்படையில் அடுத்தகட்டமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. அத்துடன், அத்தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேலதிக ஏற்பாடுகளும் உள்ளன.
அதேநேரம், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தவிசாளர் பதவி வெற்றிடமாகவுள்ளது. அந்தப் பதவி வெற்றிடம் விரைவில் நிரப்பபட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும் கூட. ஆனால் அரசியலமைப்பு பேரவை இன்னமும் குறித்த வெற்றிடத்துக்கான பெயரை அனுப்பி வைக்கவில்லை. உரியவாறு பெயர் முன்மொழியப்படுகின்றபோது நாம் வெற்றிடத்தினை நிரப்புவதற்கு தயாராகவே உள்ளோம்.
மேலும், நிமல்போபகே உள்ளிட்ட எந்தவொரு பெயரையும் நானோ அரசாங்கத்தின் பிரதிநிதிகளோ முன்மொழியவில்லை. அவ்வாறு முன்மொழிவதற்கும் எமக்கு அதிகாரங்கள் இல்லை. அரசியலமைப்பு பேரவையிடமே அதிகாரம் உள்ளது என்றார்.