13ஏ திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள், ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க கட்சித் தலைவர்களுக்குக் காலக்கெடு
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை ஆகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஜூலை 26 அன்று கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில், 13வது அரசியலமைப்புத் திருத்தம் முழு நாட்டையும் பாதிக்கும் விடயம் என்பதால், அனைத்துக் கட்சிகளுடனும் இது குறித்து விவாதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பான முடிவெடுப்பது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





