சஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
குறித்த அபராத தொகையைச் செலுத்தத் தவறின், பிரதிவாதிக்கு மேலதிகமாக 6 மாத காலச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்த வழக்குத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவுக்கு எதிரான, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்ட வழக்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 28-09-2026 அன்று கொழும்பு நீதிவான் அசங்க எஸ் போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச வழக்கு விசாரணைக்காக மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவுக்கு நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதிசெய்து தீர்பளித்திருந்தது. இந்நிலையில் அந்த தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி சஷி வீரவன்ச உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்துள்ளதாக நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தரப்பத்தின் போது தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குறித்த மேன் முறையீடு தொடர்பில் உயர் நீதிமன்றம் நேர அட்டவனை ஒன்னை வழங்காமையால், அதனை தாக்கல் செய்வதுக்கு காலவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அறிவித்தது.
போலி ஆசவனங்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகக் காணப்பட்ட சஷி வீரவன்சவுக்கு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் இரண்டு வருடக் கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
குறித்த அபராத தொகையைச் செலுத்தத் தவறின், பிரதிவாதிக்கு மேலதிகமாக 6 மாத காலச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்த வழக்குத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அச்சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகையிலிருந்து தம்மைக் குற்றமற்றவராக விடுதலை செய்யுமாறு கோரி சஷி வீரவன்சவினால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





