கண்டி - யாழ்ப்பாணம் வீதியை அகலப்படுத்தி மேம்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், கண்டி - யாழ்ப்பாணம் வீதியின் குறிப்பிட்ட பகுதியை அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கண்டி - யாழ்ப்பாணம் வீதியின் 58+240 கிலோமீற்றர் முதல் 63+000 கிலோமீற்றர் வரையான பகுதியை அகலப்படுத்துதல் மற்றும் நவீன முறையில் மேம்படுத்துதல் இதன் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தேசிய போட்டி விலைமுறிக்கோரல் முறையின் கீழ் இதற்காக மொத்தம் 08 விலைமனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விலைமனுக்களை மதிப்பீடு செய்த உயர்மட்ட பெறுகைக் குழு மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபை ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு அமைவாக, தகுதிபெற்ற குறைந்தபட்ச விலைமனுவைச் சமர்ப்பித்த M/s Tudawe Brothers (Pvt) Ltd நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.
பெறுமதி சேர் வரி நீங்கலாக மற்றும் நிச்சயமற்ற நிதிகள் உட்பட 1.070 பில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இப்பாதைப் பகுதி மேம்படுத்தப்படுவதன் மூலம் கண்டி மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையிலான போக்குவரத்து நெரிசல் குறைந்து, பயணப் பாதுகாப்பு மற்றும் வீதி உள்கட்டமைப்பு கணிசமாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





