வட,கிழக்கில் இராணுவத்தினரால் காணிகள் அபகரிக்கப்படவில்லை பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண
தள்ளாடி சோதனை சாவடி விடயத்தில் ஜனாதிபதி கூறியதை போன்று பொருத்தமான வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இராணுவத் தளபதி நடவடிக்கை எடுப்பார்.
வடக்கு, கிழக்கில் தேசிய பாதுகாப்புக் கருதி இராணுவத்தினரால் காணிகள் பயன்படுத்தப்படுகின்றதே தவிர, அவர்களால் எங்கேயும் காணிகள் அபகரிக்கப்படவில்லை என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 28-11-2026 அன்று இடம் பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அடைக்கலநாதன் எம்.பி கூறுவதை போன்று வடக்கு, கிழக்கில் எங்கேயும் நாங்கள் காணிகளை அபகரிக்கவில்லை . அவற்றை தேசிய பாதுகாப்புக்காக பயன்படுத்துவதையே செய்கின்றோம். மன்னாரில் மாத்திரம் 1400 ஏக்கர் அரச காணியும், 19 ஏக்கர் தனியார் காணியும் இந்த வருடத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தலைமன்னாரில் தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தள்ளாடி சோதனை சாவடி விடயத்தில் ஜனாதிபதி கூறியதை போன்று பொருத்தமான வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இராணுவத் தளபதி நடவடிக்கை எடுப்பார்.
குறிப்பாக காணிகளை நாங்கள் அபகரிக்கவில்லை . அவற்றை பயன்படுத்துவதை மட்டுமே செய்கின்றோம். எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி முடிந்தவற்றை விடுவிக்க விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம் என்றார்.





