25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டம்
அரச ஊழியர்கள் அனைவருக்கும் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதும் இப்போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கும் உரிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வலியுறுத்தி அரச தாதியர் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் தேசிய எதிர்ப்பு தினப் போராட்டத்தை முன்னெடுத்தன.
முக்கியமாக, அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கம் 23-11-2026 அன்று 11.30 மணி முதல் நுவரெலியா, பதுளை, கண்டி, பேராதனை, அம்பாறை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, வவுனியா, களுபோவில, நாவலப்பிட்டி, அங்கொடை, கேகாலை, குருநாகல், புத்தளம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும், அரசாங்கதினால் முன்வைக்கப்பட் வரவு செலவு திட்டத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரச தாதியர் உத்தியோகத்தர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுடன், அரச ஊழியர்கள் அனைவருக்கும் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதும் இப்போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையுடன், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், அரச மற்றும் மாகாண அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கம், ஒன்றிணைந்த சுகாதார சேவை சங்கம், அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம், அகில இலங்கை ஆசிரியர் சங்கம், தேசிய ஆசிரியர் இயக்கம், இணைந்த ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களும் களமிறங்கி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தன.





