சுற்றுச்சூழல் அறிக்கையிடலில் புதிய ஊடக முன்முயற்சி
பசுமைக் கொள்கைகள் தங்களது வாழ்வாதாரம், ஆற்றல் விலைகள் மற்றும் சமூகங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை சாமானிய குடிமக்கள் புரிந்துகொள்வதை இத்திட்டம் உறுதி செய்கிறது.
இலங்கையில் புதிய ஊடக முன்முயற்சியொன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்புடன் செயற்படுத்தப்படும் 'பசுமை மீட்சி வசதி' என்ற திட்டத்தின் கீழ், 'பசுமை மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான ஊடக திறன் மேம்பாட்டு முன்முயற்சி என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பிரான்ஸ் ஊடக அபிவிருத்தி முகவர் நிலையமான கனல் பிரான்ஸ் இன்டநர்ஷனல் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியவற்றுக்கு இடையிலான உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் சுற்றாடல், காலநிலை மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அறிக்கையிடலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடவடிக்கைள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இலங்கையில் சுற்றுச்சூழல் சார்ந்த ஊடகவியலானது பாரம்பரியமாக இயற்கை அனர்த்தங்கள், அவற்றின் தாக்கங்கள் குறித்தே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளது. இந்நிலையை மாற்றி, காலநிலை நிதி வழங்கல், பசுமை முதலீடுகள், நிலையான அபிவிருத்தி, பல்லுயிர் பெருக்கம், பசுமை மாற்றத்தின் கொள்கை மற்றும் பொருளாதாரப் பரிமாணங்கள் உள்ளிட்ட பரந்த பிரச்சினைகளை ஊடகவியலாளர்கள் விரிவாக ஆராய்வதற்கு இத்திட்டம் வழிவகுக்கிறது.
இந்த விடயங்களை ஆராய்ந்து சான்றுகளின் அடிப்படையிலான தொடர்ச்சியான செய்திகளை உருவாக்குவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் புலனாய்வுத் திறன்களை ஊடகவியலாளர்கள் வளர்த்துக்கொள்ள இத்திட்டம் ஆதரவளிக்கும்.
அத்துடன், சிக்கலான காலநிலை நிதி விவகாரங்களை பகுப்பாய்வு செய்யவும், அரச கொள்கைகளை பரிசீலிக்கவும், பசுமை முதலீடுகளின் போக்கு மற்றும் தாக்கங்களை கண்காணிக்கவும் தேவையான கருவிகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை பசுமை மாற்றம் என்பது ஒரு கற்பனைக் கருத்து அல்ல. மாறாக, அது அவசியமான மக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஒரு வழியாகும். இருப்பினும், இந்த மாற்றம் வெற்றியடைய வேண்டுமாயின், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் மற்றும் நிறுவனங்கள் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் உள்ளது.
சிக்கலான நிதி மற்றும் ஆளுமை சார்ந்த கருத்துக்களை பொதுமக்கள் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலான செய்திகளாக மாற்றுவதற்கு நிருபர்களை வலுப்படுத்துவதன் மூலம், பசுமைக் கொள்கைகள் தங்களது வாழ்வாதாரம், ஆற்றல் விலைகள் மற்றும் சமூகங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை சாமானிய குடிமக்கள் புரிந்துகொள்வதை இத்திட்டம் உறுதி செய்கிறது.
முக்கியமாக, பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் குரல்கள் மற்றும் கருத்துக்கள் தேசிய சுற்றாடல் உரையாடலில் கேட்கப்படுவதையும், பரிசீலிக்கப்படுவதையும் ஊக்குவிப்பதன் மூலம் 'நியாயமான மாற்றம்' மற்றும் பாலின சமத்துவத்தை முதன்மைப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் ஊடகவியலாளர்கள், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சமூக ஊடக வலைத்தளங்கள் மற்றும் தொடர்புடைய ஊடக வலையமைப்புக்கள் மூலம் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ விண்ணப்ப அறிவித்தலின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.





