மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தெரிவுக்குழு ஜுலை 10இல் கூடுகிறது
பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எதிர்க்கட்சியின் முதன்மை முன்மொழிவாக உள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு ஜூலை 10ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் நிலவும் முட்டுக்கட்டைக்கு உடனடியாக தீர்வு காணப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தனது முடிவை எடுப்பதற்கு மேலதிகமாக மூன்று மாத கால அவகாசம் கோரியுள்ளதால் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக தீர்மானமொன்றை எடுப்பதில் தொடர்ச்சியான தாமதங்கள் நீடித்து வருகின்றது. இதன் காரணமாக இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படவில்லை.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்திலேயே நான், மனோ கணேசன், சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் மற்றும் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தோம். எனினும், அரசாங்கத்தின் தொடர்ச்சியான தாமதங்கள் காரணமாக, ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத காலக்கெடுவைத் தாண்டியும் இந்த செயன்முறை நீண்டு செல்கின்றது.
பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எதிர்க்கட்சியின் முதன்மை முன்மொழிவாக உள்ளது. இக்கட்டமைப்பிற்குள் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான கட்டாயப் பிரதிநிதித்துவத்தை அரசாங்கம் கோரியுள்ளது. எவ்வாறாயினும் எதிர்க்கட்சிகள் அதனை சட்ட ஏற்பாடாக இல்லாது விட்டாலும் 25சதவீத ஒதுக்கீட்டை வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தெரிவுக்குழு தனது பணிகளைத் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்தும் முறையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலைமையானது இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படாது என்ற தங்களின் கருத்தை உறுதிப்படுத்துகிறது என்றார்.





