கனடிய உயர்ஸ்தானிகருடனான சந்தப்பில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி வலியுறுத்திய விடயம்
தாயக பகுதிகளில் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்ளத்தக்கதாக தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவும், அரசியல் கைதிகளின் விடுதலை சம்மந்தமாகவும் வலியுறுத்தப்பட்டது.
மாகாண சபைகளுக்கான மக்கள் பிரதிநிதித்துவம் நீண்டகாலமாக காணப்படாத நிலைமைகள் தொடருக்கின்ற நிலையில் தேர்தலை தாமதமின்றி நடத்துவதற்கான இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிக்குமாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் கனடிய உயர்ஸ்தானிகரிடத்தில் வலியுத்தினர்.
யாழ்ப்பாணத்தில் 27-01-2026 அன்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தனிகர் இஸபெல் மார்டினுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றிருந்தது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சந்திரகுமார், இட்ணலிங்கம், வேந்தனர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, பிற்போடப்பட்ட நிலையில் கிடப்பில் வைத்திருக்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சூழலை உருவாக்கி அதனை காலம்தாழ்த்தாது நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் உரையாடப்பட்டது.
குறிப்பாக, பாராளுமன்றத் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அக்குழு அடுத்தகட்டமாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமித்து மீளவும் எல்லை நிர்ணய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பரிந்துரைக்குமாயின் தேர்தல் மூன்று , நான்கு ஆண்டுகளுக்கு பிற்போடப்படும் சந்தர்ப்பங்களே காணப்படுகின்றன.
அவ்வாறான நிலைiமைகள் ஏற்படுமாயின் இந்திய இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டமை, 13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்புக்கள் உள்வாங்கப்பட்டமை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் பலனற்றதாகவே போய்விடும் நிலைமைகள் உள்ளன.
ஆகவே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு இராஜதந்திர மட்டத்தில் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று கோரியதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார். அத்துடன், கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாகவும், கனடிய உயர்ஸ்தானிகருக்கு தெளிவு படுத்தப்பட்டது. மகாவலி எல் வலயம் அமைக்கப்பட்டபோதும் அங்கு மகாவலி நீரைக் கொண்டுவர முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கிவுல் ஓயா மூலம் அத்திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்டவர்களுக்கான நீர் வசதியை செய்து கொடுப்பதோடு மேலதிகமாக தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விட, வாழ்வாதார காணிகளையும் கையகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் தித்வா புயலால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் உள்ளிட்ட பல விடங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலைளில் 23500மில்லியன் ரூபா பணத்தினை இத்திட்டத்துக்கான அரசாங்கம் எங்கிருந்து பெற்றுக்கொள்ளப்போகின்றது என்ற கேள்வி எழுதுவதாகவும் குறிப்பிட்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
அத்துடன், தாயக பகுதிகளில் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்ளத்தக்கதாக தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவும், அரசியல் கைதிகளின் விடுதலை சம்மந்தமாகவும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் வன இலாக்கா, தொல்பொருள் திணைக்களங்கள் தாயகத்தில் மக்களது குடியேற்ற நிலங்களை ஆக்கிரமித்து தமிழர் தாயகத்தில் பொதுமக்கள் காணிகளில் அத்துமீறி விகாரைகளை அமைத்தல், இராணுவத்தினரின் பிரசன்னமும் விடுபடாமல் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களின் விடுவிப்பு போன்ற பலதரப்பட்ட விடயங்களை கனேடிய தூதுவர் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாக சந்திப்பில் பங்கேற்ற ஏனைய பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.





