அந்நியச் செலாவணியை ஆடம்பர வாகன இறக்குமதிக்கு வீணடிக்கிறது: முன்னிலை சோசலிச கட்சி
னாதிபதி நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிக்கொண்டாலும், பருப்பு, வெங்காயம், சவர்க்காரம் மற்றும் பிள்ளைகளின் பாடசாலைப் புத்தகங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் வரியை அரசாங்கம் விதித்துள்ளது.
தொழிலாளர்களின் உழைப்பினால் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணியை ஆடம்பர வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் வீணடிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை பாரிய நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளதாக முன்னிலை சோஷலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் 09-11-2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஏற்றுமதி வருமானம் 7.3 சதவீதமாக அதிகரித்த போதிலும், இறக்குமதிச் செலவுகள் 12.2 சதவீதமாக அதையும் விட அதிகமாக உயர்ந்துள்ளதால், நாட்டின் வர்த்தகச் சமநிலையில் பாதகமான விளைவு ஏற்பட்டுள்ளதுடன், வர்த்தகப் பற்றாக்குறை 1.2 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமான நெருக்கடியில் தள்ளும் என்று எச்சரிக்கைகளை விடுத்த போதிலும் அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை.
ஆடைத் தொழில் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிரமப்பட்டு கடந்த ஆண்டை விட மேலதிகமாக 700 மில்லியன் டொலரை ஈட்டித் தந்துள்ளனர்.
ஆனால், அந்தத் தொகையை போன்று சுமார் இரு மடங்கு ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்ய செலவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிக்கொண்டாலும், பருப்பு, வெங்காயம், சவர்க்காரம் மற்றும் பிள்ளைகளின் பாடசாலைப் புத்தகங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் வரியை அரசாங்கம் விதித்துள்ளது.இதற்கு முற்றிலும் முரணாக, சொத்து மற்றும் பெருநிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த எட்டு மாதங்களில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வெறும் 84 மில்லியன் டொலர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.மீதமுள்ள நான்கு மாதங்களில் டொலர் 953 மில்லியன் ஈட்டுவது சாத்தியமற்றது என்றும், இதுவே நாட்டின் அடிப்படை நெருக்கடியாகும்.இதனிடையே,கொத்தலாவல தனியார் பல்கலைக்கழகத்திற்காக அரச நிதியில் இருந்து 700 மில்லியன ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கல்விக்காக உலகில் மிகக் குறைவாகச் செலவு செய்யும் மூன்று நாடுகளில் இலங்கையும் உள்ளது. இலங்கையை விட குறைவாகச் செலவு செய்யும் மற்ற இரண்டு நாடுகள் ஹெய்டி மற்றும் லாவோஸ் மட்டுமே ஆகும்.இந்த நிலை தொடர்ந்தால், கல்விக்காக மிக குறைவாக செலவு செய்யும் நாடு என்ற உலக சாதனையை இலங்கை விரைவில் படைக்கும். இது பாரிய சமூக விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.





