ராஜித்த நீதிமன்றில் ஆஜராவதாக அறிவிப்பு
தனது சேவை பெறுநரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திருத்தி, அந்த உத்தரவை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
அதன்படி மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, தனது சேவை பெறுநரின் கைதுக்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு விடுத்த கோரிக்கை தொடர்பாக உத்தரவு எதனையும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா கலிங்கவன்ச பிறப்பிக்கவில்லை.
எவ்வாறாயினும் தனது சேவை பெறுநர் 29-08-2025அன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவித்தல் பிரகாரம் ஆஜராவார் என ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த சீராய்வு மனு பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, மனுதாரர் ராஜித சேனாரத்னவிற்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, 2013 ஆம் ஆண்டு மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான "வெலிகொவ்வா" கப்பல் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணையைத் ஆரம்பித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க கடந்த ஜூலை 2 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழு கடிதம் அனுப்பியிருந்தாலும், காய்ச்சல் காரணமாக தனது சேவை பெறுநர் அன்று ஆஜராக முடியவில்லை என்றும், இது தொடர்பாக மருத்துவ அறிக்கைகளை ஆணைக் குழுவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.
அதன்பிறகு, சட்டப்படி தனது சேவை பெறுநருக்கு உள்ள உரிமைகளின்படி அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்ததாகவும், பின்னர் நீதிமன்றம் அதனை விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தின் குறித்த தீர்மானத்தை எதிர்த்து தனது சேவை பெறுநர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதை விசாரிக்க அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறிருந்த போதிலும், கடந்த 12 ஆம் திகதி, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தனது சேவை பெறுநரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும், அந்த பிடியாணையை நீதவான் பிறப்பித்த விதம் சட்டத்திற்கு முரணானது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, அத்தகைய பிடியாணையைப் பிறப்பிக்க முன்பு சாட்சியங்களை நெறிப்படுத்துவது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சாட்சியங்களை நெறிப்படுத்தாமல் தனது சேவை பெறுநருக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்ததாகக் குற்றம் சாட்டினார்.
அதன்படி, கடந்த 12 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் பிறப்பித்த பிடியாணை முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது என்றும், அந்த உத்தர்வை திருத்தக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தனது சேவை பெறுநரை நாளை ( இன்று 29) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்பியுள்ளதாகவும், அதன்படி, தனது சேவை பெறுநர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிச்சயமாக ஆஜராவார் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, தனது சேவை பெறுநரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி , இந்த மனு தொடர்பாக அறிவித்தல் மட்டுமே பிறப்பிக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு, எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி இவ்வழக்கை விசாரணைக்கு அழைப்பதாக நீதிபதி அரிவித்தார்.





