கூட்டு எதிர்க்கட்சிகளின் அரச எதிர்ப்பு பேரணி
ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது.
ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன.
எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் திலித் ஜயவீரவின் எங்கள் மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இன்றைய பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. மூன்று பிரதான விடயங்களை வலியுறுத்தி இந்த பேரணி இடம்பெறவுள்ளது.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் என என்ற தொனிப்பொருட்களின் கீழ் இந்த பேரணி இடம்பெறவுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேரணியில் தான் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தான் நிச்சயமாக பேரணியில் கலந்துகொள்வதாகவும், இந்த நிகழ்வுக்கு பெருந்திரளான மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்கேற்பு குறித்து வினவியபோது, இந்தப் பேரணி தொடர்பாக அந்தக் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இந்த பேரணியில் பெருமளவான மக்கள் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். அரசாங்கத்துக்கு எதிராக எழுந்து நிற்பதற்கு இந்தப் பேரணி முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை நுகேகொடை எதிர்ப்புப் பேரணியில் கட்சி என்ற ரீதியில் அனைவரும் கலந்துகொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவ குழு ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் நாடு செல்வதால், அவர் பேரணியில் கலந்துகொள்ள மாட்டார். இருப்பினும், மற்ற அனைவரும் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று கொழும்பில் நேற்று ரணில் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் முதல் மக்கள் பேரணியை வெற்றிகரமாக நடத்துவதற்கு என்ன தடைகள் வந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சி தமது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும், எதிர்காலத்தில் எதிர்க்கட்சியில் உள்ள மற்ற கட்சிகளையும் இதில் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும், அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு பரந்த சக்தியாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.





