ஐ.நாவின் உடனடி உதவி நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 4.5 மில்லியன் டொலர்கள் நிதி
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அவசியமான நிவாரண உதவிகளை வழங்குவதிலும், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதிலும் அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதி உறுதியளித்தார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் உடனடி உதவி நிதியத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள 4.5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி நேற்றைய தினம் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்ஞ்சேவினால் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்குப் பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கிவருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்ஞ்சேவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது நாட்டின் சமகால நிலைவரம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அவசியமான நிவாரண உதவிகளை வழங்குவதிலும், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதிலும் அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதி உறுதியளித்தார்.
அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் உடனடி உதவி நிதியத்தின் ஊடாக 4.5 மில்லியன் டொலர்கள் நிதியை உடனடியாக வழங்குவதற்கு ஐ.நா சபை தீர்மானித்திருப்பதாக கூறிய வதிவிடப்பிரதிநிதி, அந்நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
அதேபோன்று தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்கள் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் உதவிகளில் உணவுப்பாதுகாப்பு, முறையான வீடு, தூய குடிநீர், கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இதுகுறித்து விரிவான மதிப்பாய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் இருந்து 5 அதிகாரிகள் அடங்கிய குழு நாட்டை வந்தடைந்திருப்பதாகவும் மார்க் அன்ட்ரூ பிரான்சே இச்சந்திப்பில் எடுத்துரைத்தார்.





